உள்ளாட்சித் துறையிலிருந்து பொதுநூலகத்திற்குத் தரவேண்டிய 250 கோடி ரூபாய் நிலுவை தொகையை உடனே தரவேண்டி, இந்தியப் படைப்பாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், “உலகம் முழுவதும் அச்சுறுத்தும் கொரோனா வைரசால் தற்பொழுது ஏற்பட்டிருக்கும் எதிர்பாராத பேரிடரால் பதிப்புத்துறையில் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக” இந்தியப் படைப்பாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் கவலைத் தெரிவித்துள்ளது.

 Publishers Association request for TN Govt

“பல ஆண்டுகளாக உள்ளாட்சித்துறையில் இருந்து சுமார் 250 கோடி ரூபாய் நூலகத்துறைக்கு வரவேண்டி உள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என அவர்களிடமிருந்து பெறப்பெற்ற வரிகளில், 10 சதவிகிதம் நூலக வரி பெறப்படுகின்றது. அவ்வரி பொதுநூலகத்துறைக்கு மிகவும் குறைவாகவே வழங்கப்பட்டுள்ளது. இதனால், பதிப்புத்துறையைச் சார்ந்த டிடிபி, பிரிண்டிங், பைண்டிங், பிளேட் மேக்கிங், நெகட்டிவ் மேக்கிங், லேமினேஷன் என பதிப்புத்துறையைச் சார்ந்த 10 லட்சத்திற்கும் அதிகமானவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக” கவலைத் தெரிவித்துள்ளனர்.

“கொரோனா வைரசால் முடங்கியுள்ள பதிப்பாளர்களின் வாழ்வாதாரத்தைத் தமிழக அரசு கருத்தில் கொண்டு, உள்ளாட்சித்துறை வழங்க வேண்டிய நிதியை ஒரே தவணையாக பொது நூலகத்துறைக்கு வழங்கி, பதிப்பாளர்களுக்குத் தரவேண்டிய நிலுவைத்தொகையையும் வழங்குமாறும்” கேட்டுக்கொண்டுள்ளனர். 

 Publishers Association request for TN Govt

“பெரும்பாலான பதிப்பாளர்கள் பொதுநூலகத்துறைக்கு விநியோகம் செய்வதற்காக வட்டிக்குப் பணம் வாங்கி பேப்பர் உள்ளிட்ட முதலீடுகள் செய்து, புத்தகங்களை வழங்கி உள்ளனர். சுமார் 1000 த்திற்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் புத்தகங்களை விநியோகித்துள்ளனர். இப்பேரிடர் நேரத்தில் அரசு பதிப்பாளர்களுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையை வழங்குமாறும்“ கேட்டுக்கொண்டுள்ளனர். 

“கடந்த 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகான எல்லா நூலக ஆர்டர்களிலும், 2.5 சதவிகிதத்தை அரசு பிடித்தம் செய்தது. இந்த இக்காட்டான சூழலில், அந்த 3 கோடி ரூபாய் நிதியிலிருந்து, பதிப்புத் தொழில் சார்ந்தவர்களுக்கு உதவிகள் வழங்க புதிய பதிப்பார்கள் நல வாரியத்தை, தமிழக அரசு உடனே அமைத்து, செயல்படுத்த வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதேபோல், “பதிப்பாளர்கள் 2018, 2019 ஆம் ஆண்டிற்கான புதிய நூல்களை பலகோடி ரூபாய் முதலீடு செய்து வெளியிட்டுள்ளார்கள். இதனால், பதிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில், 2018, 2019 ஆம் ஆண்டிற்கான நூல்களை அரசு கொள்முதல் செய்து, அனைத்து நூலகத்திற்கும் வழங்குமாறு” கேட்டுக்கொண்டுள்ளனர்.

“பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்கு அடித்தளமான புத்தகங்களை அச்சிட்டு வெளியிடும் பதிப்புத்துறையினரின் மேற்கண்ட இந்த 3 அவசரமான கோரிக்கைகளை உடடினயாக நிறைவேற்றிட வேண்டி” முதலமைச்சர் பழனிசாமிக்கு இந்தியப் படைப்பாளர் மற்றும்  பதிப்பாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.