"கமலுடன் இணைவது குறித்து காலம்தான் பதில் சொல்லும்" என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சி துவங்குவது குறித்து, மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “அரசியல் கட்சி துவங்குவது குறித்து மாவட்டச் செயலாளர்கள் தம்மிடம் ஏராளமான கேள்விகளை எழுப்பியதாகவும், அதற்கு நான் அளித்த பதில் திருப்தியாக இருந்ததாக அவர்கள் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.

“ஆனால், ஒரு விஷயத்தில் மட்டும் எனக்கு ஏமாற்றம் இருந்ததாகவும், அது என்ன என்று பிறகு கூறுகிறேன்” என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

அப்போது, “தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நீங்களும், கமலும் இணைந்து நிரப்புவீர்களா?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு, “கமலுடன் இணைவது குறித்து காலம் தான் பதில் சொல்லும்" என்று ரஜினிகாந்த் கூறினார்.

மேலும், மத குருமார்கள் சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “அது ஒரு இனிமையான சந்திப்பு. நாட்டில் அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் நிலவ வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள். என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்கள். நானும் என்னால் முடிந்த உதவிகளைச் செய்யத் தயாராக உள்ளதாகவும் கூறினேன்.

குறிப்பாக, சி.ஏ.ஏ., என்பிஆர் விவகாரத்தில் மோடி, அமித்ஷாவுடன் குருமார்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்றும் ஆலோசனை கூறியதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.