பொதுமுடக்கம் மே 17ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக முதலில் 21 நாட்களும், பிறகு, மே 3 ஆம் தேதி வரையும் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், பொதுமுடக்க விதிமுறைகள் அமலில் இருந்தபோதும், கொரொனாவின் வீரியம் குறையாமல், பலரையும் தாக்கி வந்தது. இதனால், பல்வேறு மாநில முதலமைச்சர்கள், ஊரடங்கு காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் வலியுறுத்தி வந்தனர்.

இதனிடையே, நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு, அனைத்து மாநில முதலமைச்சர்களிடமும், பிரதமர் மோடி நேற்று இரவு காணொலி காட்சி மூலம் உரையாடினார். அப்போது, பல்வேறு மாநிலங்களில் உள்ள கொரோனாவின் தாக்கம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக, பிரதமர் மோடி நேற்று மாநில முதலமைச்சர்களிடம் சூசமாகக் கூறியதாக செய்திகள் வெளியானது.

இதனையடுத்து, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கொரோனாவின் தற்போதைய சூழல் குறித்து, அனைத்து துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு வரும் 17 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இந்த தகவலை பிரதமர் மோடி, தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதில், ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் தளர்வுகள் குறித்தும் பிரதமர் பேச உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இந்த உரையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.