ஜூன் 1 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால், 10 ஆம் வகுப்பு பொது தேர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அத்துடன், பொதுத் தேர்வு நிச்சயம் நடைபெறும் என்றும், அந்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

10th public exam from 1st June in TN

இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், “ஜூன் 1 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும்” என்று தெரிவித்தார்.

மேலும், “சுகாதார துறையினரின் அறிவுறுத்தலின்படி, சமூக இடைவெளியுடன் தேர்வு நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும்” அவர் குறிப்பிட்டார்.

“பள்ளி திறப்பு குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், தேர்வுகளை நடத்துவதில் மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

இதனைத்தொடர்ந்து, 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணையையும் அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். 

10th public exam from 1st June in TN

அதன்படி, 

ஜூன் 1 ஆம் தேதி மொழிப்பாடம் தேர்வு

ஜூன் 3 ஆம் தேதி ஆங்கிலம்

ஜூன் 5 ஆம் தேதி கணிதம்

ஜூன் 6 ஆம் தேதி விருப்ப மொழிப்பாடம்

ஜூன் 8 ஆம் தேதி அறிவியல்

ஜூன் 10 ஆம் தேதி சமூக அறிவியல் 

தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கான ஒரு பாடத்திற்கான தேர்வு ஜூன் 2 ஆம் தேதி நடைபெறும் என்றும் அவர் கூறினார். 

குறிப்பாக, வரும் 27 ஆம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் என்றும், அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.