இந்தோனேசியாவில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித் திரியும் பொதுமக்களை பயமுறுத்தும் வகையில், பேய் வேடம் ஏற்று போலீசார் உலா வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளுக்கு மேல் பரவி உள்ளது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காமல் உலக நாடுகள் எல்லாம் திணறி வரும் நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக, எல்லா உலக நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது.

இதன் காரணமாக, பொதுமக்கள் தேவையின்றி யாரும் வெளியே வர வேண்டாம் என்று அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் பொதுமக்களில் சிலர், ஊரடங்கையும் மீறி வெளியே சுற்றித் திரிகின்றனர். மேலும், பலரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல், அரசின் உத்தரவை மதிக்காமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதேபோல் ஒரு குற்றச்சாட்டு, இந்தோனேசியாவிலும் முன் வைக்கப்பட்டன. இதனால், நூதன முறையில் யோசித்த அந்நாட்டு போலீசார், புது முயற்சியில் இறங்கினர்.

இந்தோனேசியா நாட்டின் ஜாவா தீவில் உள்ள கெபு என்னும் கிராமத்தில், மக்கள் அதிக அளவில் வீடுகளை விட்டு வெளியே வருவதாகக் கூறப்பட்டதால், அப்பகுதி போலீசார், மக்களைப் பயமுறுத்தும் வகையிலும், பொதுமக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்கச் செய்யும் வகையிலும், இரவு நேரத்தில் பேய் வேடமிட்டு அந்த பகுதிகளில் உலா வருகின்றனர்.

அப்போது, வீதிகளில் நின்று பேசிக்கொண்டு நிற்கும் பொதுமக்கள் பேய் வேடமிட்ட மனிதனை பார்த்ததும், பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு, நாலா புறமும் சிதறி ஓடி, வீடுகளில் தஞ்சமடைகின்றனர். இந்த செயலால், தற்போது அந்த கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல், வீடுகளிலேயே முடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, பொதுமக்களைப் பயமுறுத்த போலீசார் பேய் வேடத்தில் உலா வரும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.