நாடு முழுவதும் 11,637 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 377 ஆக அதிகரித்துள்ளது. 
 
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், 2 வது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

Corona affected people increases over 11,637 in India

மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், புதிதாக 350 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 2,684 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு, கொரோனா பாதிப்பால் 178 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 259 பேர் குணமடைந்துள்ளனர். 

புனேயில் இன்று மேலும் 4 பேர் பலியானதைத் தொடர்ந்து அங்கு மொத்த பலி எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. 

குஜராத்தில் எம்.எல்.ஏ வுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மதியம் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியை சந்தித்த அகமதாபாத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ இம்ரான் கெதேவாலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரை சந்தித்துவிட்டு காரில் சக எம்.எல்.ஏ ஒருவருடன் பயணித்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆந்திராவில் மேலும் 19 பேருக்கு கொரோனா உறுதியானதால், அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 502 ஆக உயர்ந்துள்ளது.

Corona affected people increases over 11,637 in India

தெலுங்கானாவில் 10 மாத குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, நோய்த்தொற்றால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 644 ஆக உயர்ந்துள்ளது.  

ஒடிசாவில் கஞ்சம் மாவட்டத்தில் பொது இடங்களில் எச்சில் துப்ப அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறினால், ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் மதுபானம் விற்க அனுமதி வழங்கப்பட்டதால், மதுக் கடைகளில் கூட்டம், வழக்கத்தை விட அலைமோதியது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேகாலயாவில் கொரோனாவுக்கு முதல் பலி நிகழ்ந்துள்ளது. அங்கு கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஷில்லாங்கை சேர்ந்த 69 வயது மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மேகாலய முதலமைச்சர் கன்ராட் சங்மா தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,076 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 38 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,637 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 399 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சைபெற்றுக் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1306 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே, மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரில் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒன்று கூடி, தங்களைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கேரளாவில் வீட்டு வாடகை கொடுக்க முடியாத 48 தமிழ் குடும்பங்களை வீட்டு உரிமையாளர், வெளியே துரத்திய சம்பவம் பலரையும் வேதனை அடையச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.