தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,075 ஆக உயர்ந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு முடியும் நிலையில், முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இதில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் மற்றும் முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

 Corona count increases to 106 in TN 1075 affected

குறிப்பாக, ஊரடங்கை நீட்டித்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே, தமிழகத்தில் நேற்று மேலும் 106 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 199 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ராயபுரத்தில் அதிக பாதிப்புகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. 

திருப்பூரில் நேற்று ஒரே நாளில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு வயதுக் குழந்தைக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது.ஷஆம்பூரில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 1075 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 11 ஆக உயர்ந்துள்ளது. 

 Corona count increases to 106 in TN 1075 affected

மேலும், கொரோனா அறிகுறியுடன் 39,041 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், 162 பேர் அரசு முகாமிலும் உள்ளனர். 58,189 பேருக்கு 28 நாட்கள் வீட்டு கண்காணிப்பு முடிந்துள்ள நிலையில், தற்போது 10,655 மாதிரிகள் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.

அதேபோல், தனியார் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைக்கான செலவைத் தமிழக அரசே ஏற்கும் என்று சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 1,75,636 பேர் கைதாகி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விதிகளை மீறி சுற்றித்திரிந்ததாக 1,63,477 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 1,39,008 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, இதுவரை 68,57,344 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.