சென்னை தவிர பிற மாவட்டங்களில் நாளை முதல் சலூன் கடைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக, கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரும் 31 ஆம் தேதி வரை 4 வது முறையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பணிகளுக்கும் ஒன்றன்பின் ஒன்றாகத் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையைத் தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் சலூன் கடைகள், அழகு நிலையங்களை நாளை முதல் திறக்கலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, காலை 7 மணி முதல், மாலை 7 மணி வரை மட்டுமே சலூன் கடைகளைத் திறக்கலாம் என்றும் தெரிவித்துள்ள தமிழக அரசு, தடை செய்யப்பட்ட பகுதிகளில் கடைகளைத் திறக்க அனுமதி இல்லை என்றும், கூறியுள்ளது.

மேலும், குளிர்சாதன வசதியை சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்களில் பயன்படுத்தக்கூடாது என்றும், அனைத்து கடைகளிலும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றும், தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

அதேபோல், கடைகளில் கிருமி நாசினியை அவ்வப்போது தெளிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு வாடிக்கையாளர்களும், கிருமி நாசினி கொண்டு கை கழுவிய பின்னரே கடைக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும், தமிழக அரசு கூறியுள்ளது.

குறிப்பாக, தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் தொழிலாளர்களை பணியமர்த்தக்கூடாது என்றும், தமிழக அரசு உறுதிபட தெரிவித்துள்ளது.

சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அவர்களைக் கடைக்கு உள்ளே அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளையும் தமிழக அரசு விதித்துள்ளது.

தமிழகத்தில், ஊரக பகுதிகளில் மட்டும் சலூன் கடைகளைத் திறக்க தமிழக அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் சலூன் கடைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இதனிடையே, தமிழகம் முழுவதும் ஆட்டோ இயங்க பல்வேறு நிபந்தனைகளுடன் தமிழக அரசு நேற்று அனுமதி அளித்திருந்த நிலையில், இன்று முதல் ஆட்டோக்கள் இங்கத் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.