வங்கிக்கடன் தவணைகளை செலுத்த 3 மாதம் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். 

கொரோனா தொற்றால் வீழ்ந்த இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதனைத்தொடர்ந்து, 5 கட்டமாகப் பொருளாதார திட்டங்கள் மற்றும் சீரமைப்பு தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல அறிவிப்புகளை வெளியிட்டார்.

RBI Governor Shaktikanta Das Press Conference

நிதியமைச்சரின் பல கட்ட அறிவிப்புகளை அடுத்து முதன் முறையாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்தா தாஸ் தற்போது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சந்தை பொருளாதாரத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

“2020-21 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறையும் என்றும், தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டுப் பற்றாக்குறையைச் சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றும், அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.

மேலும், “ரிசர்வ் வங்கியால் குறைக்கப்பட்ட வட்டியில் வங்கிகள் கடன் அளிக்கப்படும் என்றும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை மேம்படுத்தவும் மாநிலங்களுக்கான நிதிப் பிரச்சினைகளைச் சரி செய்யவும் வங்கி நடவடிக்கை” எடுக்கும் என்றும் சக்திகாந்தா தாஸ் நம்பிக்கை அளித்தார்.

“அடுத்த சில மாதங்களில் பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் விலை உயர வாய்ப்பு உள்ளது என்றும், இதனால் மூலதன கடன்கள் அளிக்கப்படும்” என்றும் சக்திகாந்தா தாஸ் கூறினார்.

RBI Governor Shaktikanta Das Press Conference
 
குறிப்பாக, “3 மாதங்களுக்குச் சிறு தொழில்களுக்குக் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், மாதத் தவணை செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது” என்றும் சக்திகாந்தா தாஸ் தெரிவித்தார்.

அதன்படி, ”வீடு, வாகன கடன்களுக்கான கடன் தவணைகளைச் செலுத்தக் கூடுதலாக மூன்று மாதம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

மேலும், மாதத் தவணை செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என்றும், அவர் குறிப்பிட்டார். 

“உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்றும் குறிப்பிட்ட  சக்திகாந்தா தாஸ், கொரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதார பாதிப்பில் இருந்து இந்தியா மீண்டெழும்” என்றும், நம்பிக்கைத் தெரிவித்தார்.

அதேபோல், “தொழில்துறை உற்பத்தி மார்ச் மாதத்தில் 17 சதவிகிதம் குறைந்துள்ளது என்றும், ஜிடிபி வளர்ச்சி வரும் காலாண்டில் எதிர்மறையாக இருக்கும் என்றும், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் சுட்டிக்காட்டினார்.