திருமணம் செய்து கொள்வதாக விதவையை ஏமாற்றி மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மாதவரம் கே.கே.ஆர். கார்டன் பகுதியைச் சேர்ந்த 24 வயது விதவை பெண் ஜெயஸ்ரீ, மறுமணம் செய்வது தொடர்பாக, திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார்.

அப்போது, 34 வயதான ரமேஷ், அந்த விதவையைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, அந்த பெண்ணிடம் அறிமுகமாகி உள்ளார்.

அத்துடன், தான் சென்னை துறைமுகத்தில் அதிகாரியாக இருப்பதாகவும், ஒரு விதவையைத் திருமணம் செய்துகொள்வதே தனது லட்சியம் என்றும் சினிமா பாணியில் கூறியுள்ளார்.

இதில் மயங்கிய அந்த விதவை பெண், அந்த இளைஞரை நம்பி பழகி வந்துள்ளார்.

இதனிடையே, அந்த இளைஞருக்கும், அந்த பெண்ணுக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

திருமணத்திற்காக, 25 பவுன் தங்க நகைகளும், ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணமும் வரதட்சணையாகப் பேசப்பட்டது.

நிச்சயதார்த்தம் முடிந்து சில நாட்கள் விதவை ஜெயஸ்ரீ வீட்டில் தங்கியிருந்த ரமேஷ், தனது நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு, வரதட்சணைக்காக வீட்டில் வாங்கி வைத்திருந்த 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தையும் திருடிக்கொண்டு சென்றுவிட்டார்.

வீட்டிலிருந்த நகை மற்றும் பணம் மாயமானது அந்த பெண்ணின் வீட்டிற்குத் தெரியவந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த விதவையின் பெற்றோர், மோசடி செய்த ரமேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், ரமேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், “திருநின்றவூர் கொசவம்பாளையத்தைச் சேர்ந்த ரமேசுக்கு, பம்மல் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஏற்கனவே திருமணமாகி, 2 குழந்தைகள் இருப்பது தெரிய வந்தது.

மேலும், திருமணத்துக்குப் பிறகு வேலைக்குச் செல்லாமல் வீட்டில் சும்மா இருந்து வந்த அவர், பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி, பல லட்சம் ரூபாய் மோசடியிலும்” ஈடுபட்டது தெரியவந்தது.

இதனிடையே, ரமேஷ்சிடமிருந்து சுமார் 20 பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால், பம்மல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.