என்.பி.ஆர் விவகாரம் தொடர்பாக, சட்டப்பேரவைக்கு வெளியே எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதே நேரத்தில் திமுக வெளிநடப்பு செய்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம், கடந்த மார்ச் 9 ஆம் தேதி முதல், நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று காலை சட்டப்பேரவை கூடியதும், என்.பி.ஆர். குறித்து சட்டப்பேரவையில், திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது.

அப்போது பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், என்.பி.ஆர். விவகாரம் குறித்து பொதுமக்களிடம் அச்சம் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன், பாஜக கூட்டணிக் கட்சிகள் கூட, என்.பி.ஆர்.க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஸ்டாலின்,
பீகார் சட்டமன்றத்தில், என்.பி.ஆர். க்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதையும் மேற்கொள் காட்டினார்.
இந்தியாவில் உள்ள 13 மாநிலங்களில் என்.பி.ஆர் க்கு எதிராகத் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளதாகவும் அப்போது ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

ஏப்ரல் ஒன்றாம் தேதி என்.பி.ஆர். தொடர்பான பணி தொடங்கும் நிலையில், என்.பி.ஆர் க்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் அப்போது வலியுறுத்தினார்.

மேலும், என்.பி.ஆர். விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு எழுதிய கடிதத்துக்கு, மத்திய அரசு பதிலளித்துள்ளதா? என்றும் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதில் அளித்துப் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழக அரசின் கடிதத்திற்கு மத்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்தை, சட்டப்பேரவை தீர்மானம் கட்டுப்படுத்தாது என்று குறிப்பிட்டார்.

மேலும், மக்களை ஏமாற்றும், தவறான தீர்மானத்தை நிறைவேற்ற விரும்பவில்லை என்றும் அமைச்சர் உதயகுமார் பதில் அளித்தார்.

இதனையடுத்து, என்.பி.ஆர். க்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றாததைக் கண்டித்து சட்டப்பேரவையிலிருந்து திமுக வெளிநடப்பு செய்தது.

அப்போது, சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி, சட்டப்பேரவை வளாகத்திலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனிடையே, வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “அமைச்சர்களின் ஊழல் பட்டியல் மத்திய அரசிடம் இருப்பதால், தமிழக சட்டப்பேரவையில் என்.பி.ஆர். க்கு எதிராகத் தீர்மானம் போட மறுக்கின்றனர்” என்று விளக்கம் அளித்தார்.

அத்துடன், “என்.பி.ஆர் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டு வருகிறார்கள். ஆனால், ஏற்கனவே என்னென்ன தவறான தகவல்களைத் தந்தார்களோ, அதையே தான் திரும்பவும் ஆளும் கட்சியினர் கூறுகின்றார்கள்” என்று மு.க.ஸ்டாலின் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

இதனால், சட்டப்பேரவை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.