நித்தியானந்தாவின் சீடர் நிர்வாணமாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நித்தியானந்தா மட்டும் சர்ச்சையல்ல, நித்தியானந்தாவுடன் தொடர்புடையவர்கள் ஒவ்வொருமே சர்ச்சைக்குரியவர்களே என்பதை உண்மையாக்கும் வகையில் தான், நித்தியானந்தா உடன் இருப்பவர்கள் ஒருவர் பின் ஒருவராக மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றனர்.

நித்தியானந்தா புதிதாக உருவாக்கி உள்ள “கைலாசா“ நாட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டு, கடந்த மாதம் சென்ற நித்தியானந்தாவின் சீடர் ஒருவர், நேபாள எல்லையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அனாதை சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில், அதன் தொடர்ச்சியாக நித்தியானந்தாவின் நெருங்கிய சீடர் வஜ்ரவேல், கொடூரமான முறையில், நிர்வாணமாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி ஏம்பலம் பகுதியைச் சேர்ந்த 45 வயதான வஜ்ரவேல், நித்தியானந்தாவின் அதி தீவிர பக்தராக இருந்து, சீடராக மாறியவர்.

இதனையடுத்து, புதுச்சேரியில் உள்ள வில்லியனூர் மற்றும் ஏம்பலம் பகுதியில் நித்தியானந்தாவின் பெயரில் பேக்கரி கடை நடத்தி வந்தார். இதன் தொடர்ச்சியாக, பாகூர் அடுத்த கிருமாம்பக்கத்தில் புதிய கடை திறக்கும் முயற்சியில் வஜ்ரவேல் ஈடுபட்டு இருந்தார்.

இதனிடையே, கடந்த 28 ஆம் தேதி இரவு அங்குள்ள குருவி நத்தம் பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு பணம் வாங்க சென்ற அவர், பணம் வாங்கிவிட்டு திரும்பி வரும் வழியில் மாயமானர்.

அவரை கடத்திய மர்ம நபர்கள், அவரை அடித்துத் துன்புறுத்தி அவரிடமிருந்த பணத்தைப் பறித்துக்கொண்டு, அவரை நிர்வாணமாக்கி கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, உடலை காரிலேயே போட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இரவு கணவர் வீடு திரும்பாத நிலையில், சந்தேகமடைந்த அவருடைய மனைவி, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாகத் தேடி வந்த நிலையில், வஜ்ரவேல் காரில் பிணமாகக் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, விரைந்து சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மோப்ப நாய் மற்றும் கை ரேக நிபுணர்களை வரவழைத்து, கொலைக் குற்றவாளிகளை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

நித்தியானந்தாவின் சீடர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் ஒருவர் பின் ஒருவராக மர்மமான முறையில் உயிரிழந்து வரும் சம்பவம், அவரது சீடர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், பீதியை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன், நித்தியானந்தாவுக்கு நெருக்கமானவர்களில் அடுத்து யார் கொலை செய்யப்படுவார்கள் என்ற அச்சமும் எழுந்துள்ளது.