“வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்தேன்” என்று வருமான வரித்துறையிடம் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளது வைரலாகி வருகிறது. 

வருமான வரி செலுத்துவது தொடர்பாக, பொதுமக்களிடையே மத்திய அரசு பல்வேறு விழிப்புணர்வு விளம்பரங்களைச் செய்து வருகிறது.

Rajinikanth into money lending business IT raid update

இந்நிலையில், வருமான வரி செலுத்துவது தொடர்பாக, வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்தபோது, தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி, வருமான வரித்துறையிடம் நடிகர் ரஜினிகாந்த் நஷ்ட கணக்குக் காட்டி உள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2002 முதல் 2005 ஆம் ஆண்டு வரை தாக்கல் செய்த வருமான வரிக் கணக்குகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை என்று வருமானவரித்துறை குற்றம்சாட்டி, நடிகர் ரஜினிகாந்த்துக்கு அபராதம் விதித்தது.

அதன்படி, 2002-2003 ஆம் நிதியாண்டுக்கு 6 லட்சத்து 20 ஆயிரத்து 235 ரூபாயும், 2003 - 2004 ஆம் நிதியாண்டுக்கு 5 லட்சத்து 56 ஆயிரத்து 326 ரூபாயும், 2004 - 2005 ஆம் நிதியாண்டுக்கு 54 லட்சத்து 45 ஆயிரத்து 875 ரூபாயும் நடிகர் ரஜினிகாந்த்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த அபராத தொகையை எதிர்த்து, வருமான வரித்துறையின் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் நடிகர் ரஜினிகாந்த் முறையீடு செய்தார்.

Rajinikanth into money lending business IT raid update

அப்போது, கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை, வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழில் செய்ததாக நடிகர் ரஜினிகாந்த் கூறியதாகத் தெரிகிறது. 

அதன்படி, 2002-2003 ஆம் நிதியாண்டில் 2 கோடியே 63 லட்சம் ரூபாய் பணத்தை, தெரிந்தவர்களுக்குக் கடன் கொடுத்ததாகவும் கூறினார். அதற்காக, வட்டியாக 1.19 லட்சம் ரூபாய் கிடைத்ததாகவும், அதற்கான வரியைத் தான் செலுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், 2004 - 2005 ஆம் நிதியாண்டில் 1.71 கோடி ரூபாய் வாராக்கடனாக நடிகர் ரஜினி கணக்கு காட்டியுள்ளார். அதன்படி, தனக்கு 33.93 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் நடிகர் ரஜினி கணக்கு காட்டியுள்ளார்.

இதனால், வாராக்கடனைக் கணக்கு காட்டுவதற்காகவே, ரஜினி வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர். அத்துடன், இது குறித்தும் நடிகர் ரஜினியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தாம் வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழில் செய்யவில்லை என்று அவர் கூறினார். இதனால், வருமான வரித்துறை அதிகாரிகள் குழப்பமடைந்தனர்.

பின்னர், வீட்டிலிருந்து வருமானவரித்துறை அதிகாரிக்குக் கடிதம் எழுதிய ரஜினி, தான் வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழில் செய்ததாகவும், குறிப்பாக அடமானத்திற்கு கடன் வழங்குவதைத் தான், வட்டிக்குக் கடன் கொடுக்கும் தொழில் என தாம் நம்பியிருந்ததால், வருமானவரித்துறை விசாரணையில், தவறான கருத்தைத் தெரிவித்துவிட்டதாகவும் விளக்கம் அளித்திருந்தார்.

பின்னர், 2004 - 2005 ஆம் நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட கணக்கை, நடிகர் ரஜினி மீண்டும் தாக்கல் செய்தார். 

அதன்படி, வாராக்கடனை வசூலிக்கத் தாம் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும், குறிப்பிட்ட அந்த ஆண்டில் தனது வருவாய் 1.46 கோடி ரூபாய் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனாலும், நடிகர் ரஜினி வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்ததை ஏற்றுக்கொள்ளாத வருமான வரித்துறை அதிகாரிகள், அவர் கடன் கொடுத்த பணத்திலிருந்து பெறப்படும் வட்டி பணம், பிற வழிகளில் பெறப்படும் வருவாய் என்றுதான் ஏற்றுக்கொள்ள முடியும் என்று கூறி, அவரது பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

இதனிடையே, வருமான வரித்துறையிடம் நஷ்ட கணக்குக் காட்டி, வரி செலுத்தாமல் தப்பிக்கும் வகையில் நடிகர் ரஜினி கணக்குக் காட்டிய விவகாரம், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.