“விதவையாக வாழ விருப்பமில்லை” என்று, நிர்பயா வழக்கு குற்றவாளியின் மனைவி விவாகரத்து கேட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா, பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், அக்‌ஷய் குமார், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, ஆகிய 4 பேரும், வரும் 20 ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

இதனையடுத்து, அவர்கள் 4 பேரையும் தூக்கில் போடுவதற்கான ஒத்திகையை திகார் சிறைத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நிர்பயா வழக்கில் குற்றவாளியாக உறுதி செய்யப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள அக்‌ஷய் சிங் தாகூரின் மனைவி புனிதா, கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று கூறி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக, பீகார் மாநிலம் அவுரங்காபாத் குடும்ப நல நீதிமன்றத்தில் புனிதா தொடர்ந்த வழக்கில், "நிர்பயா வழக்கில் என் கணவர் குற்றமற்றவர் என்று எனக்குத் தெரிந்தாலும், அவருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பின்னர், ஒரு விதவையாக இந்த சமூகத்தில் நான் வாழ்நாள் முழுவதும் வாழ விரும்பவில்லை. அதனால், தயவு செய்து எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும்” என்றும் புனிதா குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “கடுமையான குற்றத்துக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும்போது, கணவனிடமிருந்து விவாகரத்து பெற மனைவிக்கு நம் நாட்டின் சட்டம் உரிமை அளிக்கிறது” என்று புனிதாவின் வழக்கறிஞர் மேற்கொள் காட்டி உள்ளார்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இந்த மனு மீது நாளை விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நீதிமன்றத்தில் விவகாரத்து மனு தாக்கல் செய்துவிட்டு, நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த புனிதா, “என் கணவர் அப்பாவி. அவர் தூக்கிலிடப்படுவதற்கு முன்பாக சட்ட ரீதியாக விவாகரத்து கோரியுள்ளேன். எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றும் தெரிவித்தார்.

இதனால், அவுரங்காபாத் குடும்ப நல நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன், நிர்பயா வழக்கில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.