நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரையும் மார்ச் 20 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், அக்‌ஷய் குமார், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, ஆகிய 4 பேரும் டெல்லி திகார் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கில் போடுவது தொடர்பாக கடந்த 3 முறை தேதி அறிவிக்கப்பட்டு, பின்னர் தூக்கில் போடுவது 3 முறையும் நிறுத்தி வைக்கப்பட்டது. கடைசியாக 4 பேரையும் மார்ச் 3 ஆம் தேதி தூக்கிலிடுவது, கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டது.

இதற்குக் காரணமாக, “நிர்பயா வழக்கில் குற்றவாளி பவன் குப்தாவின் கருணை மனு குடியரசுத் தலைவரிடம் நிலுவையில் உள்ளதால், மறு உத்தரவு வரும் வரை 4 பேரின் தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்தி வைப்பதாக” டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே, பவன் குப்தாவின் கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று நிராகரித்தார்.

இதனால், நிர்பயா குற்றவாளிகள் 4 பேரும் விரைவில் தூக்கில் ஏற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற புதிய தேதி அறிவிக்கக்கோரிய, டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் திகார் சிறை நிர்வாகத்தின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் விசாரித்தபோது, “இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யவுள்ளதால், வழக்கை ஒத்தி வைக்கவேண்டும்” என்று குற்றவாளியான பவன்குமார் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து, நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரையும், மார்ச் 20 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

இதனிடையே, நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு, தற்போது 4 வது முறையாகத் தூக்கில் ஏற்றுவதற்கான தேதி குறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.