ஊரடங்கு காரணமாக, நண்பரை சூட்கேசில் அடைத்து தனது அபார்ட்மெண்டுக்கு நண்பர் ஒருவர் தூங்கி வந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. அதேபோல், கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில், இந்த கெடுபிடி இன்னும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில், மக்கள் அதிக அளவில் வசிப்பதால், கொரோனா பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் காரணமாக, வெளியாட்கள் யாரும் உள்ளே வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மங்களூருவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில், வெளியாட்கள் யாரும் உள்ளே வரக்கூடாது என்று கடுமையான விதிமுறைகள் போடப்பட்டுள்ளன. மேலும், வெளியாட்கள் யாரும் உள்ளே வராத படி, செக்கியூரிட்டி கடுமையாக்கப்பட்டதுடன், சிசிடிவியும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.

இதனால், அங்குள்ள கல்லூரி ஒன்றில் தன்னுடன் படிக்கும் வெளியூரைச் சேர்ந்த தனது நண்பனை, தனது வீட்டிற்கு அழைத்து வர நினைத்த மாணவர் ஒருவர், வித்தியாசமான முறையில் யோசித்துள்ளார்.

அதன்படி, தன்னுடைய நண்பரை ஒரு பெரிய சூட்கேசில அடைத்து வைத்து, சூட்கேசை இழுத்துக் கொண்டு வந்துள்ளார். சூட்கேசுடன் தனது அடுக்குமாடிக் குடியிருப்பிற்குள் வந்ததும், அங்குள்ள காவலர்கள், கவனித்துள்ளனர். அப்போது, சூட்கேனை இழுக்க முடியாமல் அந்த மாணவர் சிரமப்பட்டுக்கொண்டிருக்க, அந்த சூட்கேஸ் தானாகவே அசைந்துள்ளது.

இதனால், சந்தேகமடைந்த அந்த காவலர்கள், சூட்கேசை திறந்து காட்டச் சொல்லி அடம் பிடித்துள்ளனர். முதலில் திறந்து காண்பிக்க மறுத்த அந்த மாணவர், பின்னர் வேறு வழியில்லாமல் திறந்து காண்பித்துள்ளார்.

அதில், அந்த மாணவரின் நண்பர் ஒருவர், சுருண்டு படித்திருந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார், இருவரிடமும் விசாரணை நடத்தினர். மேலும், இருவரும் மாணவர்கள் என்பதால், வழங்கு எதுவும் பதிவு செய்யாமல் எச்சரித்து அனுப்பினர்.

இதனிடையே, நண்பரை வீட்டிற்கு அழைத்து வர நினைத்த மாணவர் ஒருவர், தனது நண்பரை சூட்கேசில் வைத்து அடைத்து அபார்ட்மெண்டுக்கு தூக்கி வந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.