மதுரையில் கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் செலுத்தாத கல்லூரி மாணவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதாக சான்றிதழ் வந்தது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதியன்று கள்ளந்திரி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டு முதல் டோஸ் செலுத்திக் கொண்டுள்ளார்.

அந்த கல்லூரி மாணவருக்கு இரண்டாம் டோஸ் செலுத்துவதற்கான கால அவகாசம் கடந்த நவம்பர் 2 முதல் 30-ஆம் தேதி வரை என சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் சொந்த பிரச்சனைகள் காரணமாக அந்த கல்லூரி மாணவரால் குறிப்பிட்ட தேதியில் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள முடியாமல் இருந்துள்ளார்.

வெளியூரில் தங்கிப் படிப்பதால் அடுத்த வாரம் மதுரைக்கு வருகையில் அதே கள்ளந்திரி ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்ளலாம் என திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி அவர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி விட்டதாக அவருக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதனை Cowin இணையதளத்திலும் உறுதி செய்துள்ளனர். இந்த குழப்பம் குறித்து சம்பந்தப்பட்ட கள்ளந்திரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் விசாரித்த போது, தவறுதலாக அப்படி பதிவிடப்பட்டு இருக்கலாம் என்றும், மீண்டும் இந்த மையத்தில் வந்து விபரத்தை சொல்லி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனவும் அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனனர்.

மேலும் இந்த மையத்திற்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வர இயலாவிட்டால் என்ன செய்வது என கேட்டதற்கு, எந்த மையமாக இருந்தாலும் பரவாயில்லை அங்கு சென்று தவறுதலாக பதிவிடப்பட்ட விபரத்தை தெரிவித்து செலுத்திக் கொள்ளலாம் என கள்ளந்திரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமாரிடம் விளக்கம் கேட்டதற்கு, அப்படி சான்றிதழ் தவறுதலாக வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும், அப்படி வந்திருந்தால் அது குறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுப்பதாகவும், சம்பந்தப்பட்ட நபர் உடனே வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும் தெரிவித்தார்.

தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா சாதனை படைத்து விட்டதாக விளம்பரம் செய்து கொண்டிருக்கும் நிலையில், மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்ற அன்று தடுப்பூசி தவணை முடிந்த நபர்களை எல்லாம் தடுப்பூசி செலுத்தியதாக சுகாதாரத்துறை கணக்கு காட்டுவதற்காக இப்படியான செயல்களை செய்கிறதோ என சந்தேகம் எழுவதாக பயனாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தடுப்பூசி குறித்த ஐயத்தையும், அச்சத்தையும் நீக்கி மக்களை தடுப்பூசி செலுத்த பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வரும் நிலையில், தடுப்பூசி சான்றிதழ் விவகாரத்திலும் எழுந்து வரும் புகார்கள் மேலும் குழப்பத்திற்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.