கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

supreme court

மத்திய பேரிடர் நிவாரண நிதி மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதியுதவிகளை வழங்குவதில் சில மாற்றங்களைக் கொண்டு வந்து மத்திய அரசு கடந்த  2015-ம் ஆண்டு ஆணை பிறப்பித்திருந்தது. இந்நிலையில் வழக்கு ஒன்றில் கடந்த ஜூன் 30-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு ஆணை ஒன்றை பிறப்பித்து உள்ளது. அதில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக குடும்பத்தினர் யாராவது உயிரிழக்க நேர்ந்தால் அந்த குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்குவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும்படி உத்தரவிடப்பட்டு இருந்தது.

அதனைத்தொடர்ந்து இந்தியாவில் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதுவரை 4.74 லட்சம் பேர் இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் வழக்கின் விசாரணையின்போது கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றும் மாநில அரசி பேரிடர் நிதியிலிருந்து இந்த தொகை வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது. எனினும் நிதி வழங்கப்படுவது தொடர்பாக அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்து வந்தது. மேலும் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த நவம்பர் 9-ம் தேதி பதிலளித்த தமிழக அரசு தமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்து 36 ஆயிரத்து 220 பேர் மரணமடைந்துள்ளதாகவும் அவர்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

கொரோனா நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட அல்லது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடும் போது உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கும் இந்த இழப்பீடு வழங்கப்படும். கொரோனா வைரஸால் தாக்கப்பட்டு மரணம் எனச் சுகாதாரத் துறை அமைச்சர் குறிப்பிட்ட மரணங்கள் அனைத்துக்கும் இந்த நிவாரணம் வழங்கப்படும். இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தேவையான ஆவணங்களை, மாநில அரசு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதை மாவட்ட தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் சரிபார்த்து அதற்கான நிதியை வழங்க ஏற்பாடு செய்வார்கள். இது தொடர்பான புகார்களை மாவட்ட துணை ஆட்சியரை கொண்டிருக்கும் மாவட்ட அளவிலான குழுவிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அளிக்கலாம். ஒருவேளை, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண நிதி மறுக்கப்பட்டால், அதற்கான காரணத்தைத் தெளிவாகக் குறிப்பிடவேண்டும். இவ்வாறு மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தில் கூறியிருந்தது.

இந்நிலையில் கொரோனாவால் இறந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்குவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா தொற்று பாதித்து மற்றும் தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட காலம் முதல் கொரோனா பெருந்தொற்று அல்லது வேறு உத்தரவுகள் வரும் வரையிலான காலக்கட்டத்திற்கு இந்த நிவாரணம் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு ஏற்கனவே நிவாரணம் பெற்றவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. கொரோனாவால் பெற்றோர்களை இழந்து ரூ.5 லட்சம், ரூ.3 லட்சம் நிவாரணம் பெற்றவர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தாது என்று அரசு தெரிவித்துள்ளது.