ஊரடங்கு காலகட்டத்தில் பெண்கள் பிரச்சினைகளைத் தீர்க்க, தமிழக மகளிர் ஆணையம் மாவட்டம் தோறும் ஆலோசகர்களை நியமித்துள்ளது.

கொரோனாவின் கோர பிடியில் தமிழகம் உட்பட உலகமே சிக்கித் தவித்தாலும், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் சற்று அதிகரித்துள்ளதாக தமிழக காவல் துறை தரப்பில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அத்துடன், சில இடங்களில் மதுபோதைக்கு அடிமையானவர்களின் வீடுகளில் தான், இந்த குடும்ப வன்முறை தலைதூக்கி உள்ளதாகவும் கூறப்பட்டது.

அதன்படி, ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும், கடந்த வார நிலவரப்படி, 257 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 69 புகார்கள் குடும்ப வன்முறை தொடர்பானவை எனவும் தேசிய பெண்கள் ஆணையம் அறிக்கை வெளியிட்டது.

மேலும், சென்னையில் குழந்தைகளின் ஆபாசப் படங்கள் அதிகளவில் இணையத்தில் தேடப்படுவதாக, அதிர்ச்சிகரமான தகவலை ஐ.சி.பி.எஃப், (Indian Child protection Fund) வெளியிட்டது.

இதனிடையே, ஊரடங்கு காரணமாக அதிகரித்துள்ள குடும்ப வன்முறைச் சம்பவங்கள் குறித்து புகார் செய்வதற்கு எளிதாக, பாதுகாப்பு அதிகாரிகளின் செல்போன் எண்களை விளம்பரம் செய்யக் கோரி வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், ஏப்ரல் 23 ஆம் தேதிக்குள், தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் பெண்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையிலும், அந்த பிரச்சனைகளுக்கு ஆலோசனைகள் பெறும் வகையிலும், பாதிக்கப்பட்ட பெண்கள் தமக்கு நேர்ந்த துன்பம், மன உளைச்சல் மற்றும் வன்கொடுமை குறித்து புகாரைத் தெரிவிக்கும் வகையிலும் தமிழகத்தில் 32 மாவட்டங்களில், ஆலோசகர்களை நியமித்து தமிழக மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், உளவியல் ரீதியாகவும் பெண்கள் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். இதனால், மனநலம் மற்றும் சட்டம் சார்ந்த ஆலோசகர்களை மாநில மகளிர் ஆணையம், நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள் மூலம் ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, வன்கொடுமை உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், தனக்கு நேர்ந்த துன்பம், மன உளைச்சல் குறித்து புகாராகத் கொடுக்கலாம்.

அதேபோல், பாதிக்கப்பட்ட பெண்களோ அல்லது அவரைச் சார்ந்தவர்களோ இந்த ஆலோசகர்களைத் தொடர்பு கொண்டு, புகார்களைத் தெரிவித்து ஆலோசனைகள் பெற்று நடவடிக்கைகள் தொடர்வதற்குரிய மனுக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும், மாநில மகளிர் ஆணையம் கூறியுள்ளது.