சென்னையில் அதிக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, ராயபுரம் பகுதியில் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படவுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ், மற்ற பகுதிகளைக் காட்டிலும், சென்னையில் அதன் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.

Corona Spreading.. 3 stage protection Royapuram in Chennai

சென்னையில் மட்டும் கொரோனாவின் கோரப் பிடியில் இதுவரை 303 பேர் சிக்கித் தவித்து வரும் நிலையில், தமிழகத்திலேயே கொரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக சென்னை ராயபுரம் பகுதி திகழ்கிறது.

ராயபுரம் மண்டலத்தில் மட்டும் இதுவரை 92 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள 4 மற்றும் 5 ஆவது வார்டுகளில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளதும் தெரியவந்துள்ளது. அங்கு மட்டும் சுமார் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராயபுரத்தை தொடர்ந்து, சென்னை திரு.வி.க. நகரில் 39 பேரும், தேனாம்பேட்டையில் 38 பேரும், தண்டையார்பேட்டையில் 37 பேரும், கோடம்பாக்கத்தில் 31 பேரும், அண்ணாநகரில் 27 பேரும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், திருவொற்றியூரில் 9 பேரும், அடையாறு மற்றும் பெருங்குடியில் தலா 7 பேரும், வளசரவாக்கம் மற்றும் ஆலந்தூரில் தலா 5 பேரும், மாதவரத்தில் 3 பேரும், சோழிங்கநல்லூரில் 2 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Corona Spreading.. 3 stage protection Royapuram in Chennai

குறிப்பாக, சென்னையில் 65.23 சதவீதம் ஆண்களும், 34.77 சதவீதம் பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில், அதிகபட்சமாக 30 முதல் 39 வயது வரை உள்ள நபர்கள் 64 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது என்றும், குறைந்தபட்சமாக 9 வயதுக்கு கீழ் 4 பேருக்கும், 80 வயதுக்கு மேல் 7 பேருக்கும் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. 

இதனால், கொரோனா வைரஸ் அதிகம் பரவி உள்ள ராயபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், காவல்துறை ஆணையர் ஏ.கே.விஷ்வநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். 

Corona Spreading.. 3 stage protection Royapuram in Chennai

இதனையடுத்து, தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள ராயபுரம் பகுதியில், மூன்றடுக்கு பாதுகாப்பு போட முடிவு செய்யப்பட்டுள்ளதாக, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

மேலும், கொரோனா பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்களுக்கு, அவர்களது வீடுகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாக அவர் கூறினார்.  

இதனைத்தொடர்ந்து, ராயபுரம் பகுதியில் உள்ள அனைத்து தெருக்களும் முழுமையாக முடக்கப்பட்டன. அனைத்து பகுதிகளும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் முழுவதுமாக கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.