இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 17,656லிருந்து  18,786 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 559 லிருந்து 599 ஆக அதிகரித்துள்ளது. 

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், கொரோனாவின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கிறது. ஆனால், மற்ற உலக நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைவு தான் என்றாலும், தற்போதைய பாதிப்புக்கே இந்திய மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.

coronavirus India update 18,786 test positive

குடியரசுத் தலைவர் மாளிகையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவருடன் பணியாற்றி வந்த மற்றும் அவருடன் தொடர்பிலிருந்த மற்ற அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மும்பையில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் அங்கு கொரோனாவினால் 7 பேர் உயிரிழந்தனர். அத்துடன், நேற்று 155 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மும்பையில் 138 பேர் பலியாகி உள்ளனர். மும்பையில் பத்திரிக்கையாளர்கள் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது. அந்த மாநிலத்தில் புதிதாக 472 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை தற்போது 4,676 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 232 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,081 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் 26 கொரோனா நோயாளிகள் ஐசியுவில் உள்ளனர். 5 பேர் செயற்கை சுவாச உதவியுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பலி எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் கொரோனா தொற்று பாதித்த 141 பேர், ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

coronavirus India update 18,786 test positive

இதற்கு அடுத்தபடியாக, குஜராத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. குஜராத்தில் இன்று புதிதாக 127 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 பேர் பலியாகி உள்ளனர். மொத்தமாக அந்த மாநிலத்தில், இதுவரை நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,066 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் பலி எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது. 

ஆந்திர மாநிலத்தில் இன்று மேலும் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 757ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கர்னூலில் 184 பேருக்கும், குண்டூரில் 158 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 336 பேராக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18786 ஆக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 599 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல், நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தோர் எண்ணிக்கை  2,842 லிருந்து 3,252 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.