இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தைத் தாண்டி உள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 567 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா வைரஸ், இந்தியாவில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்த வருவது பொதுமக்களிடையே, கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

 coronavirus India update 17,545 test positive

இதனிடையே, மும்பையில் தமிழர்கள் அதிகம் வாழும் தாராவியில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அங்கு பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 138 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 4,203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 507 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இதுவரை அங்கு 223 பேர் உயிரிழந்துள்ளனர். 

ராஜஸ்தானில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,495 ஆக உயர்ந்துள்ளது. ராஜஸ்தானில் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 205 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

குஜராத் மாநிலத்தில் மேலும் 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,851 ஆக உயர்ந்துள்ளது.  

 coronavirus India update 17,545 test positive

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால், அவருடன் பணியாற்றி வந்த மற்ற பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

டெல்லியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்தது. அங்கு, இதுவரை 2003 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், டெல்லியில் பொது இடத்தில் எச்சில் துப்பினால் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

சத்தீஸ்கரில் 7 மாத கர்ப்பிணி போலீஸ் ஒருவர் சாலையில் நின்று பணியில் ஈடுபட்டு வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

 coronavirus India update 17,545 test positive

பெங்களூரு நகரில் கொரோனா ஹாட் ஸ்பாட் பகுதியில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பாடராயனபுராவில் ஏற்கனவே 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ள நிலையில், அவருடன் தொடர்பிலிருந்த 17 பேரை அழைத்துச் செல்ல போலீசார் முயன்றனர். இதனால், அங்கு போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

தெலங்கானாவில் மே 7 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி செய்வதற்கும் அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அந்த மாநிலத்தில் 3 மாதங்களுக்கு வீட்டு வாடகை வசூலிக்கவும் தடை விதித்து முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.

கேரளாவின் ஊரடங்கு தளர்வு நடவடிக்கை, மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு எதிரானது என்று, மத்திய உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டி உள்ளது. அங்கு, கொரோனா தொற்று முற்றிலுமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால், ஊரடங்கை படிப்படியாக நீக்கப்பட்டு வருகிறது. இதனால், கேரள அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது.

புதுச்சேரியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அளித்ததால் 50 சதவீதம் உணவகங்கள் திறக்கப்பட்டு பார்சல் மட்டும் வழங்கப்படுகின்றன. சமூக விலகலுடன் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்ட நிலையில் உணவகங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. 

இப்படியாக, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1553 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 17,545 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை தற்போது 567 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, 2547 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை மீண்டுள்ளனர்.