உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25 லட்சத்தை நெருங்கும் நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1.70 லட்சமாக அதிகரித்துள்ளது. 

உலகம் முழுவதும் சுமார் 204 நாடுகளுக்குப் பரவி உள்ளது கொரோனா வைரஸ். இதனால், சுமார் 300 கோடி மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

coronavirus death toll 1.70 lakh worldwide

உலகிலேயே அதிகமாக கொரோனா வைரசுக்கு அமெரிக்காவில் தான் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் எதிர்பாராத வகையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் இதுவரை 7 லட்சத்து 92 ஆயிரத்து 700 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவுக்க இதுவரை 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவைத் தொடர்ந்து, ஸ்பெயின் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டி உள்ளது. இத்தாலியில் தற்போது வரை ஒரு லட்சத்து 81 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிப்பாக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், கொரோனா வைரஸ் தாக்குதல் மற்றும் அமெரிக்க குடிமக்களின் வேலையைப் பாதுகாப்பதன் அவசியம் ஆகியவை காரணமாக, அமெரிக்காவில் பிறநாட்டினர் குடியேறுவதைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்கான ஆணை கையெழுத்தாக உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் குறித்து விசாரணை நடத்தத் தங்களது குழுவைச் சீனாவின் வுஹான் நகருக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற, அமெரிக்க அதிபர் டிரம்பின் கோரிக்கையை, சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

coronavirus death toll 1.70 lakh worldwide

பிரான்ஸில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 383 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில் கொரோனாவுக்க உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரை 20 ஆயிரத்து 265 பேராக அதிகரித்துள்ளது. அங்கு, இதுவரை 37 ஆயிரத்து 409 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஜெர்மனியில் தற்போது வரை ஒரு லட்சத்து 47 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு இழப்பீடு கோரி, 149 பில்லியன் யூரோக்களை இழப்பீடாகக் கேட்டு ஜெர்மனி, சீனாவுக்கு பட்டியல் ஒன்றை அனுப்பி உள்ளது. 

இங்கிலாந்தில் ஒரு லட்சத்து 24 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறையை எதிர்த்து இந்திய வம்சாவளி கர்ப்பிணி மருத்துவர் ஒருவர், பிரிட்டிஷ் பிரதமர் அலுவலகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டார்.
 
ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே உள்நாட்டு போர் மற்றும் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில், தற்போது கொரோனா வைரசும் அங்கு பெரும் 

அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகையில், மேலும் 20 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த நாட்டில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி வருகிறது. தற்போது வரை 30 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிங்கப்பூரில் ஜூன் 1 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்தை தாண்டியதை தொடர்ந்து இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஒட்டுமொத்தமாக உலக அளவில் கொரோனா வைரசுக்கு இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,81,165 ஆக அதிகரித்து, 25 லட்சத்தை நெருங்கி வருகிறது. அத்துடன், கொரோனாவுக்கு உலக அளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,70,370 ஆக உயர்ந்துள்ளது.