கொரோனா தாக்கத்தைப் பொறுத்து ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, “விமான நிலையங்களில் 2.10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளதாக” குறிப்பிட்டார்.

“தமிழக முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், பணியாளர்களை நீங்கள் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்றும், அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றும் அனைவருக்கும் நாம் துணை நிற்க வேண்டும்” என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

“சோதனை காலத்திலும் அரசுப் பணியாளர்கள் சிறப்புடன் செயல்படுகின்றனர் என்றும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாக, அரசு ஊழியர்களின் சம்பளத்தைத் தமிழக அரசு, பிடித்த செய்யவில்லை என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் முன்பைவிட சற்று அதிகரித்திருப்பாகவும், சிலர் தடை உத்தரவைச் சரியாகப் பின்பற்றுவதில்லை என்று குறிப்பிட்ட முதலமைச்சர், கொரோனா தொற்றின் தக்கத்தைப் பொறுத்து, ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்" என்றும் கூறினார்.

“10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அனைத்து பணிகளுக்குமான அடிப்படையாக உள்ளது என்றும், இதனால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எப்போது நடத்துவது என்பது குறித்து, ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.