இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5360 ஆக உயர்ந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 164 ஆக அதிகரித்துள்ளது. 

இந்தியா முழுவதும் தன் வீரியத்தைக் காட்டத் தொடங்கியிருக்கிறது கொரோனா என்னும் கொடிய வைரஸ். இதனால், நாடு முழுவதும் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது தொடர்பாக பல்வேறு மாநில அரசுகள், மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

coronavirus India death roll rate update

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மும்பை தாராவியில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கொரோனாவிற்கு தற்போது மேலும் இருவர் உயிரிழந்தனர். இதனால், புனேவில் பலி எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. 

மகாராஷ்டிராவில் தற்போது மேலும் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தற்போது 1,108 ஆக அதிகரித்துள்ளது. 

மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 690 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 576 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

 coronavirus India death roll rate update

ராஜஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போதுவரை 348 ஆக அதிகரித்தது. மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் 49 வயது நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இதனால், அங்கு கொரோனா பலி எண்ணிக்கை தற்போது 16 ஆக உயர்ந்துள்ளது. 

உத்தரப்பிரதேச அரசு, கொரோனா எதிரொலியாக போலீசாருக்கு 50 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீட்டை அறிவித்துள்ளது. 

குஜராத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. தெலங்கானாவில் பிறந்து 23 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஒட்டு மொத்தமாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 773 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 35 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதன் காரணமாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது வரை 5 ஆயிரத்தைக் கடந்து, 5360 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

அதே நேரத்தில், இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், இதுவரை 402 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 

மேலும், ஆந்திராவில் நேற்று புதிதாகப் பிறந்த பெண் மற்றும் ஆண் குழந்தைகளுக்கு கொரோனா குமார், கொரோனா குமாரி என்று பெயர் சூட்டிப்பட்டது. 

இதனிடையே, கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எதிர்க்கட்சி தலைவர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.