தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ள நிலையில், சென்னையில் மட்டும் 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா என்னும் கொடிய வைரஸ் தமிழகம் முழுவதும் தற்போது அதிவேகமாகப் பரவத் தொடங்கியிருக்கிறது. இதனால், மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

coronavirus chennai death roll rate update

தமிழகத்திலேயே சென்னையில் அதிகபட்சமாக 159 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும், சென்னை ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 43 பேருக்கும், திரு.வி.க. நகர் மண்டலத்தில் 22 பேருக்கும், அண்ணாநகர் மண்டலத்தில் 19 பேருக்கும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 18 பேருக்கும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 13 பேருக்கும் கொரோனா வைரஸ் பரவி இருக்கிறது.

அதேபோல், தேனாம்பேட்டை மண்டலத்தில் 11 பேருக்கும், பெருங்குடி மண்டலத்தில் 5 பேருக்கும், திருவொற்றியூர், வளசரவாக்கம், அடையாறு மண்டலங்களில் தலா 4 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும், மாதவரம் மண்டலத்தில் 3 பேருக்கும், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் மண்டலங்களில் தலா 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

coronavirus chennai death roll rate update

அதே நேரத்தில், சென்னையின் முக்கிய பகுதிகளான மணலி, அம்பத்தூரில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால், சென்னை முழுவதும் மாநகராட்சி ஊழியர்கள், வீடு வீடாகச் சென்று கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கொரொனாவை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே, இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், “கொரோனாவால் சென்னையில் அச்சப்படக்கூடிய சூழல் இதுவரை எங்கும் இல்லை” என்று கூறினார்.

மேலும் “வீடு வீடாக ஆய்வு செய்யும்போது, மக்கள் மறைக்காமல் தங்களிடம் உள்ள உடல் நலப் பிரச்சனைகளை கூற வேண்டும்” என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கேட்டுக்கொண்டார்.