உலக அளவில் கொரோனா பலி எண்ணிக்கை 82 ஆயிரத்தைத் தாண்டி உள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 15 லட்சத்தை நெருங்கி வருகிறது. 

சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா என்னும் கொடிய வைரஸ், இன்று உலக நாடுகளையே உலுக்கி எடுத்து வருகிறது. இந்த கொரோனாவின் கோரப் பிடியில் உலக மக்கள் யாவரும் சிக்கித் தவித்து வருகின்றனர்.

coronavirus world death toll rate update

உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டி உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 33 ஆயிரம் பேருக்குத் தொற்று ஏற்பட்ட நிலையில், அமெரிக்காவில் பலியானவர்களின் எண்ணிக்கையும் தற்போதுவரை 12 ஆயிரத்து 837 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், உலக சுகாதார நிறுவனத்துக்கு நிதி கிடையாது என்றும், வழங்கப்படும் நிதியை நிறுத்தி வைக்கப்போவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு தற்போது 14 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இத்தாலியில் 1 லட்சத்து 35 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அந்நாட்டில் 17 ஆயிரத்து 127 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் கடந்த சில நாட்களாக 5 வது இடத்திலிருந்த பிரான்ஸ் நாட்டில், நேற்று ஒரே நாளில் மட்டும் 11 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிரான்ஸ் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

coronavirus world death toll rate update

ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்தைத் தாண்டி உள்ள நிலையில், அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரமாக உள்ளது.

அதேபோல், இங்கிலாந்தில், இந்திய இதய அறுவை சிகிச்சை நிபுணர், கொரோனா வைரசுக்குப் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், இங்கிலாந்தில் கொரோனாவுக்க பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 55 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்ததுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

நேற்று ஒரே நாளில் மட்டும் உலகம் முழுவதும் 8 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவுக்க உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உலக அளவில் தற்போது 82 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. அதேபோல், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் தற்போது 14.30 லட்சத்தைத் தாண்டி, 15 லட்சத்தை நெருங்கி வருவது வேதனை அளிக்கிறது. 

இதனிடையே, கொரோனா பரவல் குறித்து உலக நாடுகள் முன் வைக்கும் குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் என அனைத்தையும் கண்டு கொள்ளாமல், சீனா தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.