ஊரடங்கு உத்தரவைப் பயன்படுத்தி, கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை லாரி ஏற்றிக் கொன்ற மனைவி அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

ஆந்திரா எல்லையில் உள்ள சித்தூர் மாவட்டம் மதப்பள்ளியில் பாலசுப்ரமணியம் - ரேணுகாதேவி தம்பதியினர், கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில், உள்ளூரில் பார்த்த தொழில் சரிவர ஓடாததால், பாலசுப்ரமணியம் திருப்பதியில் தங்கியிருந்து டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தார்.

Wife killed husband in Chittoor

கணவர் ஊரில் இல்லாத நேரத்தில் அவரது மனைவி ரேணுகாதேவி, அந்த பகுதியில் செயல்பட்டு வந்த சமூக சேவை நிறுவனத்தில், உறுப்பினராகச் சேர்ந்தார். 

இதனையடுத்து, அந்த அமைப்பின் தலைவர் நாகிரெட்டி என்பவருடன், ரேணுகா தேவிக்கு கள்ளக் காதல் ஏற்பட்டுள்ளது. இதனால், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். இப்படியாகக் கள்ளக் காதலர்கள் இருவரும் 2 ஆண்டு காலம் வாழ்ந்து வந்தனர்.

2 ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் திரும்பிய பாலசுப்ரமணியம், சொந்த ஊரிலேயே டிராவல்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். இதனால், கள்ளக் காதல் தம்பதிகள் தாங்கள் நினைத்த நேரத்தில் உல்லாசம் அனுபவிக்க முடியாமல் தவித்து வந்தனர். இதனால், கணவன் - மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்தது. ஒரு கட்டத்தில், கள்ளக் காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனைக் கொலை செய்ய, அவரது மனைவி ரேணுகாதேவி முடிவு செய்தார்.

Wife killed husband in Chittoor

இதனிடையே, கொரோனா தாக்கம் காரணமாகத் தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால், சாலையில் ஆட்கள் நடமாட்டம் இருக்காது என்பதைப் பார்த்த ரேணுகாதேவி, இது தான் கணவனைக் கொலை செய்ய சரியான நேரம் என்று கள்ளக் காதலன் உடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார்.

அதன்படி, கடந்த 4 ஆம் தேதி இரவு நேரத்தில் உடல்நிலை சரியில்லை என்று கூறி, கணவன் பாலசுப்ரமணியத்தை மருந்து வாங்க ரேணுகாதேவி, கடைக்கு அனுப்பி வைத்துள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்தில் சென்ற பாலசுப்ரமணியம், சாலையில் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது தொடர்பாக பாலசுப்ரமணியத்தின் சகோதரர் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த நேரத்தில், கணவன் இறந்த நேரத்தில் அவரது மனைவி ரேணுகாதேவி, எந்த கவலையும் இன்றி சிரித்துக்கொண்டே சிலரும் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

இதனால், சந்தேகமடைந்த போலீசார், ரேணுகாதேவியின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தனர். அப்போது, விபத்து நடந்த நேரத்தில் கள்ளக் காதலன்  நாகிரெட்டி, லாரி ஓட்டுநர் ஆகியோரிடம் ரேணுகாதேவி மாறி மாறி பேசிவந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, லாரி ஓட்டுநரைப் பிடித்து போலீசார் தங்களது பாணியில் விசாரித்துள்ளனர். அப்போது, அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

மேலும், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ரேணுகாதேவி மற்றும் அவரது கள்ளக் காதலன் ஆகியோரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். பின்னர், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி, கார் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனிடையே, கள்ளக் காதலனுடன் சேர்ந்து மனைவியே, கணவனை லாரி ஏற்றி கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.