ஜே.என்.யு. மாணவர்களைத் தாக்கியது ஆர்.எஸ்.எஸ்.இன் மாணவச் சங்கம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், செமஸ்டர் தேர்வுப் பதிவை ஒத்திவைக்கக் கோரியும் மாணவர்கள் நேற்று முன் தினம் அமைதியான முறையில் பேரணியில் ஈடுபட்டனர்.

அப்போது, முகமூடி அணிந்திருந்த கும்பல் இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டையோடு திடீரென்று உள்ளே நுழைந்து அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை வெறித்தனமாக தாக்கி உள்ளனர்.

குறிப்பாக, ஜே.என்.யூ.பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ் உட்பட மொத்தம் 50 பேர் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த நேரத்தில் தாக்குதலைத் தடுக்க முயன்ற சில ஆசிரியர்களும் தாக்குதலுக்கு ஆளானார்கள்.

இதனிடையே, கல்லூரியில் உள்ள wi-Fi வசதிகள் கொண்ட கருவியைச் சிலர் சேதப்படுத்தியதாலேயே, கல்லூரிக்குள் போராட்டம் நடைபெற்றது என்றும், அப்போது வெறித்தனமாக தாக்குதல் நடத்தியவர்கள் ஆர்.எஸ்.எஸ். மாணவச் சங்கமான அகில பாரதிய வித்யார்தி பரிஷாத்தைச் (ABVP) சேர்ந்த மாணவர்கள் என்றும், தாக்குதலுக்கு ஆளான மாணவர்கள் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதனையடுத்து, மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாணவர்கள் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து, திருவாரூரில் கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பாலிவுட் நடிகையும், அக்‌ஷய் குமாரின் மனைவியுமான ட்விங்கிள் கண்ணா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேபோல், தாக்குதலுக்கு ஆளான ஜே.என்.யு. மாணவர்களுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டத்தில் டாப்ஸி பானு, அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.