வரதட்சணையாக 500 சவரன் நகையும், 4 கோடி ரூபாய் பணம் கொடுத்தும், ஐ.பி.எஸ். அதிகாரி மனைவியை வரதட்சணை கொடுமைப் படுத்தும் விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தேனாம்பேட்டை திருவள்ளூவர் சாலையில் வசிக்கும் ஆனந்த், கேரளாவில் ஐ.பி.எஸ் அலுவலராக பணியாற்றி வருகிறார்.

இதனிடையே, ஆனந்த்துக்கும், மேக்னா என்பவருக்கும் இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, முறைப்படி திருமணம் நடைபெற்றது.

அப்போது, வரதட்சணையாக 500 சவரன் நகைகளும், 4 கோடி ரூபாய் பணமும் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு, பெண் வீட்டார் சார்பில் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

ஆனால், திருமணத்திற்குப் பிறகு, ஆனந்த்துக்கு, மற்றொரு பெண்ணுடன் தவறான பழக்கம் ஏற்பட்டதாகவும், இதனால் தன்னிடம் வரதட்சணை கேட்டு, தனது கணவர் தன்னை துன்புறுத்துவதாகவும் அவரது மனைவி மேக்னா, சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார், புகாரைப் பதிவு செய்யாமல் இழுத்தடிப்பதாகக் கூறி, கணவர் மீது மேக்னா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதனையடுத்து, வழக்கை திரும்பப்பெற கோரி, கணவர் தொடர்ந்து தன்னை மிரட்டி வருவதாகச் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாகக் கணவன் - மனைவி இருவரையும் வரவழைத்து, போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர். அப்போது, மேக்னா தன் கணவர் மீது அடுக்கடுக்கான புகாரைக் கூறியதால், அங்கிருந்த அனைத்து போலீசாரும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து, கணவன் - மனைவி இருவரும் சராமாறியாக ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அங்கிருந்த போலீசார் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர்.

அத்துடன், மேக்னாவின் தந்தையின் சொத்தையும் ஆனந்த் அபகரிக்க முயற்சி செய்வதாகவும், அவரது மனைவி பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். இதனால், அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, வரதட்சணையாக 500 சவரன் நகையும், 4 கோடி ரூபாய் பணம் கொடுத்தும், ஐ.பி.எஸ். அதிகாரிக்கு அது போதவில்லையா என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், இணையத்தில் இந்த செய்தி வைரலாகி வருகிறது.