இந்தியாவையே உலுக்கிய தெலங்கானா கௌரவக் கொலையில் கைது செய்யப்பட்ட தொழில் அதிபர் மாருதி ராவ், தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு, தெலங்கானாவில் நடைபெற்ற கௌரவக் கொலை, இந்தியாவையே உலுக்கியது. அதற்குக் காரணம், அந்த கொலை காட்சிகள் வீடியோவாக வெளியானது, நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கௌரவக் கொலை நடந்து வருடங்கள் ஓடினாலும், அதன் வடு இன்னும் அழிய வில்லை. அதற்குள், அந்த கொலை வழக்கில் அடுத்ததொரு அதிரடி திருப்பம் நிகழ்ந்துள்ளது.

தெலங்கானாவைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபரான மாருதி ராவின் மகள் அம்ருதா, அதே பகுதியைச் சேர்ந்த பிரணய் குமார் என்பவரைக் காதலித்து வந்துள்ளார்.

இவர்களது காதலுக்குச் சாதியை காரணம் காட்டி, தொழில் அதிபரான மாருதி ராவ், கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இதனால், இருவரும் வீட்டை விட்டு வெளியே, காதல் திருமணம் செய்துகொண்டனர்.

பின்னர், அம்ருதா கரு உற்ற நிலையில், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டு, கணவர் பிரணய் குமார் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த கூலிப்படையினர், பிரணய் குமாரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.

இந்த கொலை சம்பவம், அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியது. இதனையடுத்து, அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி இந்தியாவையே உலுக்கியது.

இதனையடுத்து, கௌரவக் கொலையில் சம்பந்தப்பட்ட கூலிப்படையினர் மற்றும் கூலி படையை ஏவிவிட்ட தொழில் அதிபர் மாருதி ராவ் ஆகியோர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.

பிரணய் குமார் கொலை செய்யப்பட்டு சுமார் 4 மாதங்கள் கழித்து, அம்ருதாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

பின்னர், மாருதி ராவ் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த கொலை சம்பவம் நடைபெற்று சுமார் ஒன்றரை வருடங்கள் கடந்த நிலையில், அதன் வடு இன்னும் மாறவில்லை.

மாருதி ராவ் ஜாமீனில் வெளியே வந்தாலும், கடும் மன உலைச்சலில் காணப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாகத் தனது பண்ணை வீட்டில் தங்கியிருந்த மாருதி ராவ், திடீரென்று தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து, வீட்டில் வேலை செய்பவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.