இந்து மகா சபா தலைவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.

அகில இந்திய இந்து மகா சபா தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீகண்டன் மீது, அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் நிர,ஞ்சனி, பாலியல் புகார் கொடுத்தார்.

புகாரில், கடந்த 2016 ஆம் ஆண்டு, இந்து மகா சபாவில் உள்ள மகளிர் அணியில் இணைந்து பணிபுரிந்து வந்ததாகவும், பிறகு தன்னை பொதுச் செயலாளராகத் தலைவர் ஸ்ரீகண்டன் நியமித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பிறகே, ஸ்ரீகண்டன் தனக்கு பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் கொடுக்க தொடங்கினார் என்றும், அதற்கு நான் சம்மதிக்காமல் எதிர்த்து நின்றதால், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் நிரஞ்சனி பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார்.

மேலும், தனக்கும் தனது குடும்பத்துக்கும் ஆபத்து உள்ளது என்றும், இதனால், தங்கள் குடும்பத்துக்கு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடக்கத்தில், இதைக் கண்டுகொள்ளாமல் இருந்த போலீசார், பின்னர், ஸ்ரீகண்டன் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனிடையே, ஸ்ரீகண்டனின் மனைவி நான்சி, திடீரென்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேரில் வந்து, நிரஞ்சனி மீது புகார் அளித்தார்.

பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த நான்சி, “நிரஞ்சனி சொகுசாக வாழ்வதற்காகப் பலரைத் திருமணம் செய்து பணம் சம்பாதித்துள்ளார். எனது கணவரின் இரக்க சுபாவத்தைப் பயன்படுத்தி அவரிடம் கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

எனது கணவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கவில்லை. அது பொய்யான புகார். அந்த பெண் தான் பல வகையிலும் எங்களுக்குத் தொல்லை கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் நிரஞ்சனியின் சகோதரர் திருமணத்திற்கு 20 லட்சம் ரூபாய் என் கணவர் கொடுத்தார். அந்த பணத்தைத் திரும்பக் கேட்டதால் தான், என் கணவர் மீது பொய் புகார் அளித்துள்ளார்” என்று நான்சி பதில் குற்றச்சாட்டைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இதனால், இந்து மகா சபா தலைவர் மீதான பாலியல் வழக்கில் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.