பாலியல் வழக்கில் நித்தியானந்தாவின் ஜாமீனை ரத்து செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெங்களூரு பிடதி பகுதியில் நித்தியானந்தா சாமியாரின் தியான பீட ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. அதேபோல், நித்தியானந்தாவுக்குப் பெங்களூரு மட்டுமில்லாமல், குஜராத் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் கிளைகள் உள்ளன.

இதனிடையே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட பாலியல் வழக்கில், நித்தியானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி, அவருடைய முன்னாள் சீடர் லெனின், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் புதிதாக வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா முன்பு, கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, ஒரு வாரக் காலத்திற்குள் இது தொடர்பாக நித்தியானந்தா பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், நித்தியானந்தாவின் ஜாமீனை ரத்து செய்வது தொடர்பாக, கர்நாடக போலீசாரும் பதிலளிக்க உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

இந்நிலையில், நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை என்றும், அவர் வெளிநாடுகளில் பதுங்கி இருக்கலாம் என்றும் போலீசார் தரப்பில், நீதிமன்றத்தில் கூறப்பட்டதாகத் தெரிகிறது.

இதனையடுத்து, நித்தியானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்வதாகக் கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே, நித்தியானந்தாவுக்கு எதிராக 'புளு கார்னர்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவருக்கு எதிரான பாலியல் வழக்கில் வழக்கப்பட்ட ஜாமீனும் ரத்து செய்யப்பட்டுள்ளது.