தமிழகத்தில் புதிதாக 5 பதிவு மாவட்டங்களை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்காக நிதியை விடுவிக்கவும் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழக மாவட்டங்களில் உள்ள 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாகவே அனைத்துவிதமான பத்திரப்பதிவு பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைபெறும் பத்திரப்பதிவுகளை கண்காணிக்க 50 மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. பத்திரங்களின் வரத்து மற்றும் மக்கள் தொகை அடிப்படையில், சில வருவாய் மாவட்டங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவு மாவட்டங்களும் உள்ளன.

ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் இந்த வருவாய் மாவட்டங்களில், பதிவு மாவட்டங்கள் இல்லாத சூழல் இருந்து வருகிறது. ஆகையால் திருவாரூர், திருவள்ளூர், திருப்பத்துார், ராணிப்பேட்டை, பெரம்பலுார் என ஐந்து புதிய பதிவு மாவட்டங்கள் அமைக்கப்படும் என திமுக அரசு பொறுப்பேற்றதும் கடந்த ஆண்டு அறிவித்தது.

மேலும் பதிவு மாவட்டங்கள் ஏற்படுத்த நிர்வாக பணிகளுக்காக ரூ. 2.35 கோடி ஒதுக்கவும் முடிவு செய்தது. அதில் முதற்கட்டமாக பெரம்பலுார் பதிவு மாவட்டம் உருவாக்க தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய பணியிடங்கள், நிர்வாக எல்லை வகுப்பது, அலுவலகம் அமைப்பதற்கான நிதியை விடுவிக்கவும் தமிழக அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. மற்ற 4 பதிவு மாவட்டங்கள் அமைப்பதற்கான அரசாணையும் படிப்படியாக பிறப்பிக்கப்படும் என்று பதிவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.