கொரோனா தொற்று அதிகரிப்பதால் சென்னைக்கு மே 31 ஆம் தேதி வரை ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம் என்று, பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 40 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு, மே 3 ஆம் தேதி, 3வது முறையாக வரும் 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. எனினும், நாடு முழுவதும் பல பணிகளுக்குத் தளர்வுகள் மத்திய - மாநில அரசுகள் வழங்கின.

இதனிடையே, இந்த வாரத்துடன் ஊரடங்கு காலம் நிறைவடைய உள்ளதால், பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன், தற்போது காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசி பிரதமர் மோடி, “கொரோனாவை சிறப்பாகக் கையாண்டு வருவதற்கு, சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றும், கொரோனா விவகாரத்தில் மாநில அரசுகளின் நடவடிக்கை பாராட்டத்தக்கது” என்றும், புகழாரம் சூட்டினார்.

மேலும், சிவப்பு மண்டலங்களில் கடும் நடவடிக்கை எடுத்து கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாநில முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

அதேபோல், மீண்டெழும் பொருளாதாரத்தை உத்வேகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

குறிப்பாக, தனிமனித விலகல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கையை அனைவரும் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

இதனையடுத்து, பிரதமர் மோடியிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “கொரோனா தொற்று அதிகரிப்பதால், சென்னைக்கு மே 31 ஆம் தேதி வரை ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம் என்று, கோரிக்கை விடுத்தார்.

மேலும், “கொரோனா தடுப்பு பணிகளுக்காக உடனடியாக 2,000 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு உடனடியாக, தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்றும் - முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தினார்.

இதனிடையே, தமிழகத்தில் இன்று புதிதாக 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,213 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,002 பேராக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68,607 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,222 ஆக அதிகரித்துள்ளது.