இன்றுடன் ஓய்வுபெறும் அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு இன்னும் 2 மாதங்களுக்குப் பணி நீட்டிப்பு வழங்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மெல்ல பரவி வந்த கொரோனா வைரஸ் இன்று வரை சுமார் 74 பேரை தாக்கி உள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் பலரும் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, கொரோனாவுக்கு மருத்து கண்டுப் பிடிக்க முடியாமல் மருத்துவ துறையே ஒரு பக்கம் திணறி வரும் நிலையில், ஒட்டு மொத்த மருத்துவர்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர்.

அத்துடன், கோரோனா பாதிப்பு மேலும் பரவும் என்பதால். சுமார் 20 ஆயிரம் ரயில் பெட்டிகள், தற்காலிக கொரோனா மருத்துவ மனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்று மாதத்தின் கடைசி நாள் மார்ச் 31 ஆம் தேதி என்பதால், இன்றுடன் பல அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஓய்வு பெறுவதாகக் கூறப்பட்டது.

இதனையடுத்து, இன்றுடன் ஓய்வுபெறும் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் அனைவருக்கும் இன்னும் 2 மாதங்களுக்குப் பணி நீட்டிப்பு வழங்கப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மார்ச் 31 ஆம் தேதியுடன் ஓய்வு பெறும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் என அனைவருக்கும் 2 மாதம் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒப்பந்த முறையில் மேலும் 2 மாதங்கள் பணி நீட்டித்து தற்காலிக பணி ஆணை வழங்கப்படும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “பொதுநலன் கருதி அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றும் அந்த அறிக்கையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.