கடைகளில் ஏசி பயன்படுத்தக்கூடாது என்று சென்னை மாநகராட்சி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நேற்று முன் தினம் முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சில தளர்வுகளைத் தமிழக அரசு வழங்கி உள்ளது.

அத்துடன், வைரஸ் தொற்று குறைவாக உள்ள பகுதிகளில், வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டு, அனைவரும் அதனைப் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.

மேலும், நோய் தொற்றால் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்படாத இடங்களில், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமான பொருட்கள், சானிடரிவேர், எலெக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் தனிக் கடைகள், மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோகப் பொருட்கள், மின் மோட்டார், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட அனைத்து விதமான தனிக்கடைகளும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், “சென்னையில் அனைத்து தனிக்கடைகள் இயங்கலாம் எனவும், வணிக வளாகங்கள் மற்றும் மால்கள் திறக்க அனுமதி இல்லை” என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

மேலும், “ஏசி பொருத்தப்பட்ட கடைகள் செயல்படலாம் என்று தெரிவித்துள்ள சென்னை மாநகராட்சி, ஆனால் ஏசி.,யை பயன்படுத்தக்கூடாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, “தங்கள் கடையில் ஏசி பயன்படுத்தவில்லை என்ற போஸ்டரை கடை முன் ஒட்ட வேண்டும்” என்றும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் தி.நகர் தவிர்த்து புரசைவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களும் 42 நாட்களுக்குப் பிறகு, கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்கத் துவங்கி உள்ளனர்.