தொடர்ந்து 2 நாட்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒரு வழியாக நிறைவடைந்துள்ளது.

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கடந்த 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது.

மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்காக, 27 மாவட்டங்களில் உள்ள 156 ஊராட்சி ஒன்றியங்களுக்குத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், நேற்று காலை 8 மணி முதல், இன்று பிற்பகல் வரை வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. இதனால், ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை சுமார் 30 மணி நேரத்தைத் தாண்டி நடைபெற்றது.

இதில், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 513 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 512 இடங்களுக்கு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, அதிகபட்சமாக திமுக கூட்டணி 270 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், திமுக மட்டும் 247 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அதேபோல், அதிமுக கூட்டணிக் கட்சியானது 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில், அதிமுக மட்டும் 213 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

மேலும், 5,067 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில், திமுக கூட்டணிக் கட்சியானது 2,356 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில், திமுக மட்டும் 2,110 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

அதேபோல், அதிமுக கூட்டணி 2,136 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இதில், அதிமுக மட்டும் 1,797 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

குறிப்பாக, 27 மாவட்டங்களில் 14 மாவட்ட கவுன்சிலர்களை திமுக கூட்டணிக் கட்சியானது அதிரடியாக கைப்பற்றிள்ளது.

ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக - திமுகவைத் தவிர்த்து, டிடிவி தினகரனின் அமமுக கட்சி 95 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், சீமானின் நாம் தமிழர் கட்சி ஒரே ஒரு இடத்தில் முதன் முறையாக வெற்றி பெற்றுள்ளது.