நடிகை அமலா பால் தொழிலதிபர் மீது தொடர்ந்த வழக்கிற்கு, உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் பாஸ்கர், கடந்த ஆண்டு வெளிநாட்டில் கலை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, நடிகை அமலாபால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

அந்த நேரத்தில், சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அழகேசன், தன்னிடம் ஆபாசமாகப் பேசியதாகக் கூறி, நடிகை அமலாபால் சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில், கடந்த ஆண்டு புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தொழிலதிபர் அழகேசன், தொழிலதிபர் பாஸ்கர் ஆகியோர் அதிரடியாகக் கைது செய்தனர்.

இதனையடுத்து, இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், “வெளிநாட்டுக் கலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது மட்டுமே நான் என்றும், ஆனால், நடிகை அமலாபாலிடம் தவறான அணுகுமுறையில் பேசியது நான் கிடையாது என்றும், அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” என்றும் தொழிலதிபர் பாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

இதனால், சென்னை உயர்நீதிமன்றத்தில், “நடிகை அமலாபால் அளித்த புகாரின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்குத் தடை விதிக்கக் கோரியும்” தொழிலதிபர் பாஸ்கர், மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், தொழிலதிபர் பாஸ்கர் மீதான விசாரணைக்கு அதிரடியாக இடைக்காலத் தடை விதித்தார். அத்துடன், இந்த மனு தொடர்பாக, போலீசார் பதிலளிக்கவும் நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.