கொரோனா பரவலால் சென்னையில் 363 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 1596 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவரும் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்தனர். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தங்களுக்கு உரிய வசதி இல்லை என்று மருத்துவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் இன்று புதிதாக மேலும் 10 செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலைய ரயில்வே போலீசுக்கும் கொரானா தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னையில், விமான போக்குவரத்துத் துறை அமைச்சக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 15 ஆம் தேதி வரை, அலுவலகத்திற்கு வந்து அவர் பணியாற்றி உள்ளார். இதனால், அந்த ஊழியருடன் தொடர்பிலிருந்த அனைவரையும் தனிமைப்படுத்திக் கண்காணித்து வருகின்றனர்.

சென்னையில் அம்பத்தூர் பகுதியில் இதுவரை கொரோனா பரவாமல் இருந்து வந்த நிலையில், தற்போது அம்பத்தூர் மண்டலத்திற்கும் கொரோனா பரவி உள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் ஒட்டுமொத்தமாக 363 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது.

சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அந்த பகுதியில் 3 கட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில், கொரோனா தொற்றால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 86 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 18 பேர் கொரோனா வார்டில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 24 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 76 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், ஒட்டுமொத்தமாகத் தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1596 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 அக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை 635 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.