தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,204 ஆக உயர்ந்துள்ள நிலையில், 134 கோடி ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு குவிந்துள்ளது.

சென்னையிலிருந்து வேன் மூலம் தூத்துக்குடிச் சென்ற 14 பேரை அதிகாரிகள் அங்கு தனிமைப்படுத்தியுள்ளனர். மேலும், இது தொடர்பா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரத்தில் தேடப்பட்டு வந்த கொரோனா நோயாளியை பொதுமக்கள் அடையாளம் காட்டியதின் பேரில், போலீசார் மீட்டு மருத்துவமனையில் மீண்டும் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்குத் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருச்சி மாநகரில் கொரோனா தடுப்பு மற்றும் ஊரடங்கு உத்தரவு பாதுகாப்பு பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ள போலீசார் 437 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

நெல்லையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 56 பேரில், சிகிச்சை முடிந்து இதுவரை 14 பேர் நலமுடன் வீடு திரும்பி உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்த நிலையில், அவர்கள் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்து 204 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 1,97,536 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கை மீறி செயல்பட்டதாகத் தமிழகம் முழுவதும் 1,56,314 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை ரூ.82,32,644 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகத் தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்காக இதுவரை 134.63 கோடி ரூபாய் நிதி வந்துள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அத்துடன், கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

அதே நேரத்தில், தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 40,032 PCR கருவிகளை, தமிழக அரசுக்கு, டாடா நிறுவனம் வழங்கி உள்ளது. அத்துடன், கொரோனா தொற்றை கண்டுபிடிக்க PCR கிட் கருவிகள் உதவும் என்றும் டாடா நிறுவனம் கூறியுள்ளது.