இந்தியாவில் கொரோனாவின் வீரியம் படிப்படியாக அதிகரித்து வருவதாக முதலமைச்சர் பழனிசாமி கவலைத் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்திளார்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, “தமிழகத்தில் இதுவரை 6,612 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், விமான நிலையங்களில் 2,10 538 பயணிகளுக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும்” குறிப்பிட்டார்.

“இந்தியாவில் கொரோனாவின் வீரியம் படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், இதனால் தமிழகத்தில் மேலும் 21 இடங்களில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட முதலமைச்சர், ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் தமிழகத்தில் அதிதீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படும்” என்றும் கூறினார்.

“முதல்கட்டமாக மத்திய அரசு 500 கோடி ரூபாய் நிதி வழங்கி உள்ளதாக சுட்டிக்காட்டிய முதலமைச்சர் பழனிசாமி, தேவையான முகக்கவசங்கள், வெண்டிலேட்டர்கள் மருத்துவ பொருட்கள் கையிருப்பில் உள்ளதாகவும்” குறிப்பிட்டார்.

“அமைப்புசாரா தொழிலாளர்களில் விடுபட்டிருந்த முடிதிருத்துவோர், சலவை தொழிலாளர்கள், பனைமரத் தொழிலாளிகள், கைவினை, கைத்தறி, பட்டு நெசவு, காலணி பதனிடும் துறை, ஓவியம், பொற்கொல்லர், மண்பாண்டம், வீட்டுப் பணியாளர்கள், விசைத்தறி, சமையல் தொழிலாளர்கள், நாட்டுப்புற கலைஞர்களுக்கு தலா 1,000 ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

“அரசுக்கு வருவாய் குறைந்தாலும், இருக்கும் நிதியை வைத்து அனைத்து வசதிகளையும் செய்து தருவதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், சூழ்நிலையைப் பொறுத்தே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முடிவெடுக்க முடியும்” என்றும் கூறினார்.

“தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், தமிழகத்தில் 3,371 வெண்டிலேட்டர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள நிலையில், மேலும் 2,500 வெண்டிலேட்டர்களை கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும்” முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

“வெறும் 30 நிமிடங்களில் பரிசோதனை செய்யும் வகையில், 1 லட்சம் ரேபிட் பரிசோதனை கருவிகள் வாங்கப்பட உள்ளதாகவும், ரேபிட் கருவிகள் வந்தவுடன் கொரோனா அறிகுறி உள்ளதா என விரைந்து பரிசோதனை செய்யப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“தமிழகம் முழுவதும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கச் சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், பெரும்பாலான இடங்களில் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதில்லை” என்றும் வேதனை தெரிவித்தார்.

மேலும், “மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனாவை ஒழிக்க முடியும் என்றும், மக்களவை துன்புறுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல, ஆனால் மக்கள் தற்போதைய நிலைமையைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

“இதனால், நோயின் தன்மையை உணர்ந்து மக்கள் ஊரடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், மக்கள் அனைவரும் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்” என்றும், முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

இறுதியாக, “நோய் வருவது இயற்கை என்று குறிப்பிட்ட அவர், நோயைக் குணப்படுத்தச் சரியான சிகிச்சையைப் பெற வேண்டும் என்றும், நோய் மேலும் பரவாமல் தடுக்க அரசின் நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்” என்றும் முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டார்.