தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 571 ஆக உயர்ந்துள்ளதால், தமிழக மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி 110 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஏப்ரல் 2 ஆம் தேதி 75 பேரும், ஏப்ரல் 3 ஆம் தேதி 102 பேரும், ஏப்ரல் 4 ஆம் தேதி 74 பேரும், ஏப்ரல் 5 ஆம் தேதி 86 பேரும் கொரோனா என்னும் கொடிய வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் 571 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Corona count increases to 82 in TN 571 affected

அத்துடன், தமிழகம் முழுவதும் 90,824 பேர் வீட்டு கண்காணிப்பில் இருப்பதாகவும், அரசு கண்காணிப்பில் 127 பேர் இருப்பதாகவும், 339 பேரின் முடிவுக்காகக் காத்திருப்பதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.

நேற்று சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர், சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உயர் அதிகாரிகள் தலைமையில் 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டின் அருகே சுமார் 8 கிலோ மீட்டர் சுற்றளவில் கொரோனா தொற்று நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Corona count increases to 82 in TN 571 affected

மேலும், இந்த கட்டுப்படுத்துதல் திட்டத்தில் சுமார் 12 ஆயிரம் களப்பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் மூலம், 9 லட்சத்து 22 ஆயிரத்து 860 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், 38 லட்சத்து 88 ஆயிரத்து 896 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது,

இதனிடையே, மதுரை கருப்பாயூரணியில் போலீஸ் தாக்கியதில் ராவுத்தர் என்பவர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, போலீசாரை கண்டித்து 300 க்கும் மேற்பட்டோர், அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.