உலக அளவில் கொரோனாவில் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டி உள்ள நிலையில், பலி எண்ணிக்கை 1,26,597 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு உலகமே அஞ்சி நடுங்குகிறது. பேயிக்கு பயப்பிடதாவர்கள் கூட, தற்போது கொரோனாவுக்கு பயப்படும் அளவுக்கு கொரோனா வீரியத்துடன் பரவி வருகிறது.

உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6.13 லட்சமாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 26,945 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 349 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,13,886 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது வரை 26,047 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், அமெரிக்காவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,78,503 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, உலக சுகாதார நிறுவனத்திற்கு அமெரிக்கா வழங்கி வந்த 3,000 கோடி ரூபாய் நிதி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதுவரை வழங்கி வந்த நிதியை, அதிபர் ட்ரம்ப் நிறுத்தி வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

பிரான்சில் நேற்று ஒரே நாளில் 762 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15,729 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன், பிரான்சில் மே மாதம் 11 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக, அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரோன் அறிவித்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை தற்போது கடந்துள்ளது. குறிப்பாக, 1 லட்சத்து 26 ஆயிரத்து 537 பேர் உலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். அதேபோல், 4 லட்சத்து 78 ஆயிரம் பேர் கொரோனா தாக்கத்திலிருந்து இதுவரை மீண்டுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானவர்களில் 70 சதவீதம் பேர், ஐரோப்பா கண்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.