சென்னையில் ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பால், சென்னை மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.

சென்னை திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள அம்மா உணவக பெண் பணியாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து, அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பிலிருந்து அனைவருக்கும் தற்போது பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இவரது வீடு இருப்பதால், நோய்த்தொற்று பரவி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 4 பெண் பயிற்சி மருத்துவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அங்கு, ஏற்கனவே ஆண் பயிற்சி மருத்துவருக்கு கொரோனா உறுதியானது. இந்நிலையில், துப்புரவுத் தொழிலாளர் உட்பட மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஓட்டுநர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கோடம்பாக்கத்தை சேர்ந்த 50 வயதான தூய்மை பணி வாகன ஓட்டுநருக்கு கொரோனா தொற்று இன்று காலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் பணியாற்றிய மற்ற தூய்மை பணியாளர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப்
படுத்தி உள்ளனர்.

சென்னை ஆட்டுத்தொட்டியில் இறைச்சி வாங்க சென்ற முதியவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மாதவரம் பால் பண்ணையில் பால் பாக்கெட்டை லாரியில் ஏற்றும் ஊழியர்கள் கொரோனா அச்சம் காரணமாக இன்று பணிக்கு வரவில்லை. இதனால், அந்த பணிகள் பாதிக்கப்பட்டன.

குறிப்பாக, சென்னையில் நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகத் தமிழக சுகாதாரத்துறை கூறியுள்ளது. சென்னையில் அதிகபட்சடாக திரு.வி.க.நகர் மண்டலத்தில்தான், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 300யை தாண்டி உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் கடும்
பீதியடைந்துள்ளனர்.

அத்துடன், தமிழகத்தில் 3 வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கா சில தளர்வுகள் இன்று முதல் அளிக்கப்பட்டுள்ளதால், சென்னை அண்ணாசாலையில் மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,463 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை சென்னையில் மட்டும் 17 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் நிலைமை மோசமாவதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்த 750 திருமண மண்டபங்கள், முகாம்களாக மாற்றப்பட்டு வருகின்றன. அத்துடன் பள்ளி, கல்லூரிகளில் 50 ஆயிரம் படுக்கைகள் தயாராகி வருகின்றன.

இதனிடையே, சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் பணிபுரியும் வடமாநில கூலித்தொழிலாளிகள் தங்களை உடனடியாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.