கொரோனா வைரஸ் காரணமாக சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் குறைந்து காணப்பட்டாலும், சென்னையில் அது மையம் கொண்டு, நாளா புறமும் தாக்கி வருகிறது.

குறிப்பாக, கொரோனா வைரஸ் காரணமாக சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 7 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

மேலும், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 8 பேரும், ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேரும், சென்னை ஐஐடி ஊழியர் ஒருவர் என கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில், திருவொற்றியூரை சேர்ந்த 34 வயது ஆண் ஒருவரும், வியாசர்பாடியை சேர்ந்த 45 வயது ஆண் ஒருவரும், பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 68 வயது முதியவர், புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த 77 வயது முதியவர் என 4 பேர் சற்று முன் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

மேலும், சென்னை புழலில் இருந்து பிற சிறைகளுக்கு சென்ற 5 கைதிகளுக்கு கொரோனா உறுதியானதால் புழல் சிறையில் உள்ள கைதிகள், சிறைக்காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது.

சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தேர்வுத்துறை இயக்குனரின் உதவியாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி உடனடியாக தனது அலுவலகத்தை மாற்றினார்.

அதேபோல், சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் தற்போது 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதில், அதிகபட்சமாக ராயபுரத்தில் 2 ஆயிரத்து 324 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கோடம்பாக்கம் மண்டலத்தில் 1646 பேரும், தேனாம்பேட்டையில் 1412 பேரும், திரு.வி.க நகரில் 1393 பேரும், தண்டையார்பேட்டையில் 1322 பேரும், அண்ணாநகரில் 1089 பேரும் கொரோனாவால் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், உயிர் இழப்பும் வதால், சென்னை மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.