தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாளை மறுநாள் 4 வது பொது முடக்கம் முடியும் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் துணை முதலமைச்சர் மற்றும் பல்வேறு துறைகளின் அமைச்சர்கள் பங்கேற்றனர். 

Corona spread in Tamil Nadu is under control- CM Palaniswami

இந்த ஆலோசனைக்குக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, “வல்லரசு நாடுகளை விட தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாகவுள்ளதாக” குறிப்பிட்டார்.

“இதனால், தமிழகத்தில் கொரோனாவை பற்றி மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், ஆனால் பொதுமக்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்” என்றும், முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

“இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளதாகவும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா குறைக்கப்பட்டாலும் சென்னையில் அதிகரித்துள்ளதாகவும்” முதலமைச்சர் கவலைத் தெரிவித்தார். 

“சென்னை, கோவையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் அடங்கிய பல்வேறு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்” முதலமைச்சர் கூறினார். 

Corona spread in Tamil Nadu is under control- CM Palaniswami

“வெளிமாநிலத்தில் உள்ள தமிழக தொழிலாளர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்ட முதலமைச்சர், அவசர நிலை கருதி மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும்” தெரிவித்தார்.

“அம்மா உணவகங்கள் மூலம் தினமும் 7 லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது என்றும், சொத்து வரி உள்ளிட்ட வரிகளைச் செலுத்த 3 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறினார்.

அதேபோல், “வெளிமாநில தொழிலாளர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது என்றும், 250 சமூக நல கூடங்களில் உள்ள 2 லட்சம் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது” என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், “குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷனில் கூடுதலாக அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர்,  கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு கபசுர குடிநீர் தொடர்ந்து வழங்கப்படுகிறது” என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், “வல்லரசு நாடுகளை விட தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புகள் மிகவும் குறைவு என்பதால் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை” என்றும், முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டார்.