கொரோனா வைரசால் பாதிக்கப்படுவார்கள் எப்படி உயிரிழக்கிறார்கள் என்று மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

எந்த நோயாக இருந்தாலும், சரியாகிவிடும் என்று நம்பினாலே போதும், உடல் நிலை பாதி சரியாகிவிடும். கண்ணுக்குப் புலப்படாத வைரசை உடலுக்குள் நுழையவிடாமல் பார்த்துக் கொண்டாலே, பாதி பிரச்சனை இருக்காது.

இதனால், நோய் வந்தால் இருந்து உட்கொள்ள வேண்டும் என்பதல்ல, நம் தமிழர் மரபுப் படி உணவே மருந்து முறையைப் பின்பற்றினாலே, உடம்பு எப்போதும் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் இருக்கும் என்று இயற்கை சார்ந்த சித்த மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

கொரோனா வைரசை பொருத்தவரை, பாதிக்கப்பட்ட அனைவரும் உயிரிழப்பதில்லை. குறிப்பிட்ட ஒரு சிலரே உயிரிழக்கிறார்கள். மற்ற அனைவரும், அந்த வைரசிலிருந்து மீண்டுவிடலாம்.

குறிப்பாக, கொரோனா வைரஸ் பெரும்பாலும் முதியோர்களையும் நீரிழிவு, ஆஸ்துமா மற்றும் இதய நோய் உள்ளிட்ட நோயாளிகளையே முதலில் தாக்குகிறது. கடைசியாக, நிமோனியா காய்ச்சல் என்று சொல்லப்படும் நுரையீரல் அழற்சியை ஏற்படுத்தி மனிதர்களைப் பலவீனம் அடைய செய்கிறது.

கொரோனா வைரஸ், முகம் வழியாக உடலில் நுழைந்த பின், தொண்டை அருகில் உள்ள செல்களில் முதலில் தொற்றிக் கொள்கிறது. இதனால், சிலருக்குத் தொண்டை கரகரப்பு ஏற்படும். பின்னர், சுவாசக் குழாய் வழியாக நுரையீரலின் வெளிப்பகுதியை அடைந்து, அங்கிருந்தபடி பல்கி பெருகி, தன் வேலையைக் காட்டத் தொடங்குகிறது.

சுவாசக் குழாய் சுவர்களை அரிக்கத் தொடங்கி பின்னர், உட்புறத்தில் வீக்கத்தை வைரஸ் ஏற்படுத்துகிறது. இந்த நிலையை உடல் எட்டும் போது, பாதிக்கப்பட்டவருக்கு கடும் இருமல் ஏற்படும். சுவாசக் குழாய் சுவர்களை அரித்து ஆல்வியோலி எனும் சுவாச சிற்றரைகளை கொரோனா வைரஸ் அடையும் போது, பாதிப்பு மிகப் பெரிய அளவில் இருக்கும்.

சுவாச சிற்றரை பாதிக்கப்படும்போது, அங்கு நீர் கோர்த்துக் கொள்வதால் ஆக்சிஜனை உள்வாங்கும் அனுப்பும் திறன் கெட்டு நிமோனியா ஏற்படுகிறது.

அப்போது, பாதிக்கப்பட்ட நபருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும். கொரோனாவால் ஏற்படும் நிமோனியாவுக்கு தடுப்பூசியோ சிகிச்சையோ இல்லை. வென்டிலேட்டர் மூலமே சுவாசிக்க முடியும். இந்த அபாய கட்டத்தை அடைந்தவர்கள் தான், அதிகம் உயிரிழக்கிறார்கள். கொரோனா தொற்று ஏற்பட்ட அனைவரும் இதைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. பெரும்பாலானோருக்கு அறிகுறிகள் தோன்றினாலும், மிக விரைவாகவே குணமடைந்துவிடலாம் என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

இந்த கொரோனா வைரஸ் குணமாக, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நல்ல ஓய்வு ஆகியவையே போதும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.