மே 3 ஆம் தேதிக்கு பிறகு, ஊரடங்கை நீட்டிப்பது பற்றி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

மனதின் குரல் எனப்படும் 'மன் கி பாத்' நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடம் நேற்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

PM Modi to Consulting state chief ministers today

அப்போது பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போராட்டம், மக்களும் - அரசு நிர்வாகமும் இணைந்து நடத்துவதுபோல் உள்ளதாகப் பெருமையோடு குறிப்பிட்டார்.

“இந்த கொரோனாவுக்கு எதிரான போரில், ஒவ்வொரு இந்தியரும் போர் வீரரே” என்றும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர், “நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் அவரது திறனுக்கு ஏற்றவாறு கொரோனாவுக்கு எதிரான போரில் பங்கேற்று வருவதாகவும், கொரோனா போர் வீரர்களுக்கான இணைய தளம் ஒன்று தொடங்கப்பட்டு அனைத்து தரப்பினருக்குமான பணிகள் ஒருங்கிணைக்கப்படுவதாகவும் குறிப்பிட்ட பிரதமர், தன்னார்வலர்கள், மருத்துவத் துறையினர் மற்றும் பொதுமக்கள் என ஒன்றே கால் கோடி பேர் இணைந்துள்ளதாகவும்” கூறினார்.

மேலும், “இந்த இணையதளத்தில் பொதுமக்கள் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்” என்றும் நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

PM Modi to Consulting state chief ministers today

“பொது இடங்களில் எச்சில் துப்புவதால், ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் பொது இடங்களில் எச்சில் துப்பும் வழக்கம் முழுமையாக மறைய வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், “மத்திய அரசும் மாநில அரசுகளும், பிற துறைகளும் ஒன்றிணைந்து முழு வேகத்துடன் கொரோனாவுக்கு எதிராகப் போரிட்டு வருவதாகவும், முகக்கவசம் அணிவோர் அனைவரும் நோயாளிகள் அல்ல என்றும், முகக்கவசம் நாகரீக சமூகத்தின் அடையாளமாக உள்ளதாகவும்” பிரதமர் குறிப்பிட்டார்.

“கொரோனாவிடம் இருந்து தற்காத்துக் கொள்ளவும், பிறருக்குப் பரவாமல் தடுக்கவும் விரும்பினால் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும், மருத்துவத் துறையினரின் பாதுகாப்பை உறுதி செய்வது மிக முக்கியமானது என்றும், அவர்கள் மீது தாக்குதல் தொடுப்போர் மீது மிக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், பிரதமர் மோடி உறுதிப்படத் தெரிவித்தார்.

இதனிடையே, அனைத்து மாநில முதல்வர்களுடன் இன்று காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்கிறார்.

அப்போது, மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்புப்பணிகள், மே 3 ஆம் தேதிக்கு பிறகு, ஊரடங்கை நீட்டிப்பது ஆகியவை பற்றி முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை மேற்கொள்கிறார்.