தமிழகத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது. இதில், 4 பேர் இந்தோனேசியாவிலிருந்து வந்தவர்கள். மற்றொருவர் அவர்களுக்குச் சுற்றுலா வழிகாட்டியாகச் செயல்பட்டவர் ஆவர்.

இந்நிலையில், தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழக சுகாதாரத் துறை, “ கொரோனா பாதித்த வடமாநில நபருடன், ரயில் மூலம் சென்னைக்கு வந்த 18 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், துபாயிலிருந்து தமிழகம் திரும்பிய 63 வயது முதியவர் ஒருவருக்கும், தாய்லாந்து நாட்டிலிருந்து தமிழகம் வந்தவருடன் தொடர்பிலிருந்த ஒருவருக்கும் என மொத்தம் 3 பேருக்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், திருச்சியைச் சேர்ந்த 24 வயது இளைஞருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞர் துபாயிலிருந்து வந்த விமானம் மூலம் திருச்சி திரும்பியவர் என்பது தெரியவந்துள்ளது. அத்துடன், மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே, லண்டனிலிருந்து சென்னை வந்த 24 வயது இளைஞர் மற்றும் 65 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா உறுதியான நிலையில், அவர்கள் இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர்கள் இருவரின் உடல்நிலை சீராக உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால், தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 29 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

குறிப்பாக, மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுமார் 3,625 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியுள்ளார்.